Breaking News

வடக்கு, கிழக்கில் போசாக்கு குறைபாட்டினால் சிறுவர்கள் பாதிப்பு – அனைத்துலக அறிக்கை

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அமைப்பு (Save the Children) உலகளாவிய அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை, ஐ.நா அமைப்பான சிறுவர் பாதுகாப்பு (Save the Children) அமைப்பு கடந்த 5ம் நாள் வெளியிட்டுள்ளது.

போசாக்கு குறைபாட்டினால், அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறுவர்கள் வளர்ச்சிக் குறைவை எதிர்நோக்கியுள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் சிறிலங்கா பணிப்பாளர் வில்லியம் லிஞ்ச் தெரிவித்துள்ளார்.

தாய்மார் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிலை தொடர்பாக 179 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த ஆண்டு சிறிலங்கா 91வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னர், சிறிலங்கா 89வது இடத்தில் இருந்தது. இது கவலை தரும் நிலை என்றில்லா விட்டாலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வ்வுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், சுகாதாரம் மற்றும் போசாக்கு சமத்துவமின்மை நிலவுகிறது என்றும், வில்லியம் லிஞ்ச் தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படாதமையால், பருவமழை காரணமாக, வடக்கு கிழக்கில் போருக்குப் பிந்திய சூழல் கவலைக்குரியதாக உள்ளது. வடக்கிலுள்ள மக்களின் போசாக்கு நிலையை முன்னேற்ற நீண்டகாலத் திட்டம் செயற்படுத்தப்படாமை முக்கியமான மற்றொரு கவலைக்குரிய விடயமாக உள்ளது. நுவரெலியாவிலும் கூட வளர்ச்சிக் குறைபாடு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.