இசைப்பிரியாவின் கதை சொல்லும் 'போர்க்களத்தில் ஒரு பூ' படத்திற்கு தடை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் போராளியும், ஊடகவியலாளரும் இசைப்பிரி யாவின் உண்மையான வாழ்க்கை கதையை வைத்து எடுக்கப்பட்ட ´போர்க்களத்தில் ஒரு பூ´ என்ற திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
இசைப்பிரியா 2009 இறுதிக் கட்டப் போரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இத்திரைப்படம் வெளிநாடுகளுடனான உறவிற்கு பங்கம் ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நட்பு நாடாக இருந்தாலும் கூட மனித உரிமை மீறிலில் ஈடுபட்ட இராணுவம் குறித்து விமர்சிக்க முடியாதா? தமிழ்நாடு அரசாங்கம் இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே என்று ´போர்க்களத்தில் ஒரு பூ´ திரைப்படத்தின் இயக்குநர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
‘போர்க்களத்தில் ஒரு பூ’ இந்த திரைப்படத்தின் இயக்குனர் கு.கணேசன் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படம் முடிந்து கடந்த 11ம் திகதி தணிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் தணிக்கை அதிகாரியின் விருப்பத்திற்கு ஏற்ப, அதனை 12ம் திகதிக்கு மாற்றி அமைத்து ஏற்பாடு செய்தேன்.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை படத்தை பார்த்த தணிக்கை அதிகாரி ஜெயந்தி முரளிதரன் என்னை அழைத்தார். ‘உங்கள் தயாரிப்பாளர் எங்கே? அவரது வீடு எங்கே?’, என்று கோபமாகவும், சற்று வித்தியாசமாகவும் கேட்டார். ‘உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயாரிப்பாளர் வரவில்லை’, என்று நான் கூறினேன்.
‘படத்தின் விண்ணப்பதாரரும், இயக்குனருமாகிய நான் இருக்கிறேன். எனவே தயாரிப்பாளர் வரவேண்டிய அவசியம் இல்லை’, என்று அமைதியான முறையில் கூறினேன்.
நியாயமான செயலா?
‘நம் நட்பு நாட்டை பற்றியும், நட்பு நாட்டு ராணுவ வீரர்கள் பற்றியும் ஏன் இப்படி அவதூராக சொல்லி உள்ளீர்கள்? அது தவறானது’, என்று என்னுடன் வாதம் செய்தார். ‘நட்பு நாடு இலங்கை என்றால், எதிரி நாடு என்று யாரை சொல்கிறீர்கள்?, நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை கொல்வதும், தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதும் நியாயமான செயலா?’, என்று அதிகாரியிடம் நான் கேட்டேன்.
தணிக்கை கிடையாது
நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் எங்கு உள்ளது? என்று அவர் கேட்டார். சில ஊடகங்களில் வெளியான அனைத்து ஆதாரப்பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது’, என்று நான் கூறினேன்.
ஆனால் இலங்கை நம் நட்பு நாடு என்றும் நட்பு நாட்டின் ராணுவ வீரர்களை தவறாக சித்தரித்ததால் இந்த படத்துக்கு தணிக்கை கிடையாது. இதுகுறித்து நாங்கள் மும்பை தணிக்கை முதன்மையாளர் மற்றும் வேறு இடத்திலும் கடிதம் எழுதுவோம்’, என்று சொல்லிவிட்டார்.
முடியாமல் போய்விட்டது
‘வேண்டும் என்றால் ‘ரிவைசிங் கமிட்டி’க்கு நீங்கள் பரிந்துரை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும். பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்பப்படி, மும்பையோ அல்லது டெல்லி எப்.சி.ஏ.டி டிரிபியூனலுக்கோ போகிறேன்’, என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்.
இசைப்பிரியா இறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.