ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் மன்னார் ஆயர்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்திப்பதற்காக, நேற்றுமுன்தினம் கொழும்பு சென்று கொண்டிருந்த போது, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட, அவர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் ஆயர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயரின் தலையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவுக்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.