வித்தியா கொலைச் சந்தேகநபர்களுக்கு 15ஆம் திகதி வரை விளக்கமறியல்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். வித்தியா குடும்பத்தினர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்ட 6 சட்டத்தரணிகள் கொண்ட குழுவினர் முன்னிலையாகினர். இந்த வழக்கு விசாரணைகளை காலதாமதம் செய்யாமல் முடிக்கவேண்டும் என்று வித்தியா தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
வித்தியா படுகொலை செய்யப்பட் இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருள்களையும் பிரேத பரிசோதனை மூலம் பெறப்பட்ட தகவல்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி நீதிவான் தெரிவித்தார். சந்தேகநபர்களின் ரத்த மாதிரிகளை சிறைச்சாலை ஆணையாளர் ஊடாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர்களின் கைத்தொலைபேசி அழைப்புக்களையும் அதில் பதிவாகியுள்ள ஏனைய தகவல்களையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
சுவிஸ் குமார் கைது தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் அவர் வெள்ளவத்தையில் வைத்தே கைது செய்யப்பட்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர் எவ்வாறு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து சட்டத்தரணி தவராசா கேள்வியெழுப்பினார். இது தொடர்பான தெளிவான அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.