மக்களின் காணிகளை மீள கையளிக்கும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்!- சுவாமிநாதன்
படையினர் வசமுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை மீளக்கையளிப்பத ற்கான அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு குறித்த விடயத்தைக் கொண்டுசெல்ல இருப்பதாக வும் எதிர்வரும் 29ஆம், 30ஆம் திகதிக ளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அதேபோன்று முதலாம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை வடக்குகிழக்கு தமிழ் பேசும் பிரதிநிதிகள் நேற்றைய தினம் அவருடைய அமைச்சில் இருவேறு பிரிவுகளாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு
மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராஜா, சி.சிறிதரன், யோகேஸ்வரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றைய தினம் சந்தித்தனர். இச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெ ளியிடுகையில்,
இன்றைய (நேற்று) தினம் மீள்குடியேற்ற அமைச்சரை சந்தித்து யுத்தத்தின் பின்னர் ஆறு ஆண்டுகள் ஆகியும் எமது மக்கள் இன்னமும் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள் என்பதை சுட்க்காட்டினோம். அத்துடன் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் துணையாக இருந்த விவசாயத்தை மேற்கொள்ள முடியாது படையினர் அந்நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறினோம். அத்துடன் மக்களின் நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலைமை வடக்கில் நீடித்துக்கொண்டு இருப்பதையும் குறிப்பிட்டோம்.
அதுமட்டுமின்றி தற்போது வரை வலி.வடக்கு, வளலாய், பரவிப்பாஞ்சான், சிலாவத்துறை, சம்பூர் உட்பட வடகிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்களை மீள கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.
மேலும் மீள்குடியேறிய மக்களுக்கான நிரந்தர, தற்காலிக வீடமைப்புக்கள், வாழ்வாதாரத்திட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் நாம் அமைச்சரிடத்தில் விரிவாக கலந்துரையாடினோம். மக்களின் இவ்வாறான உடனடிப்பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலை தொடராது உடனடியாக உரிய பொறிமுறை மூலம் தீர்வைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டோம்.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தாம் படைத்தரப்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் முதலாம் திகதிவரை வடக்கிற்கு நேரில் விஜயமொன்றை மேற்கொண்டு மக்கள் பிரதிநிதிகள், படைத்தரப்பின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொது மக்களின் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்காக தாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாட், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்
உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பு
வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்வதற்கு வீடுகளின்றி பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் தாங்கள் உடனடித் தீர்வொன்றை வழங்க வேண்டுமென இச்சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், முத்தலிபாவா பாரூக் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று இடம்பெற்ற இச் சந்திப்புக் குறித்து தெரியவருவதாவது:
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மக்கள் வீடுகளின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தற்காலிக வீடுகளை அமைப்பதற்குக் கூட அவர்களால் முடியாதிருக்கின்றன.
அதேநேரம் பொது மக்கள் மீள்குடியேறியுள்ள போதும் அவர்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில் வறுமைக்குள் சிக்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாய நடவடிக்கைகளையே முன்னெடுத்து வந்திருந்தனர்.
ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் இவர்களுடைய விவசாய நிலங்களில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகவும் இராணுவ முகாம்கள் மற்றும் வேறு இராணுவத்தின் தேவைகளுக்காக தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை படைத்தரப்புடன் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடாத்தி மீளக்கையளிப்பதற்கு தாங்கள் முன்வரவேண்டும் என இப்பிரதிநிதிகள் கூட்டாக கோரினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் சுவாமிநாதன்,
இவ்விடயம் தொடர்பாக நான் படைத்தரப்பினர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றேன். இதன் மூலமே வலி.வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒரு பகுதி மக்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வடகிழக்கில் படைத்தரப்பினரிடம் காணப்படும் காணிகளை விடுவிப்பதற்குரிய செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.
இதன்போது மீள்குடியேறிய மக்களுக்கான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கோரியதுடன் வெளிநாட்டு நன்கொடைகளை இவ்வாறான வீடமைப்புத் திட்டங்களுக்காகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் மேற்கொள்ளவேண்டுமென கோரினார்.
அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் சிலாவத்துறை, மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் போன்ற பிரதேசங்கள் உட்பட ஏனைய பிரதேசங்களிலும் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்குகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக என்னிடம் தகவல்கள் உள்ளன. விசேட அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் யோசனையை நான் வரவேற்கின்றேன் எனக் குறிப்பிட்டார். அதேநேரம் வடக்கில் 59 ஆயிரத்து 650 வீடுகள் தேவையாகவுள்ளன. கிழக்கில் 16 ஆயிரம் வரையிலான வீடுகள் தேவையாகவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வலி.வடக்கு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இராணுவம் மக்களின் நிலங்களில் தொடர்ந்தும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வடக்கில் பொது மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினை வெகுவாகக் காணப்படுகின்றமையைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறுவதற்கு இரணைமடுவிலிருந்து குழாய் வழித் திட்டத்தின்மூலம் யாழுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் சமுர்த்திக் கொடுப்பனவுகள் தொடர்பில் காணப்படும் பிணக்குகளுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







