தமிழர்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் - மங்கள விளக்கம்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட முடியாது. ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுப்போர் பயங்கரவாதிகளாகவே அவதானிக்கப்பட்டனர் எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர,
உண்மையான பயங்கரவாதி யார்? பிரிவினைவாதி யார்? அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்போர் யார் என்பது தொடர்பில் வித்தியாசப்படுத்தி அடையாளம் காண பொறிமுறையொன்று நடைமுறையில் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பயங்கரவாதம் மற்றும் உலக பயங்கரவாதிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டு நாடுகள் பற்றிய அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா 23 இன் கீழ் இரண்டில் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு நேற்று புதன்கிழமை சபையில் பதிலளித்து உரையாற்றும் போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இம் மாதம் வெளியிட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு தொடர்பாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது கடந்த மஹிந்தவின் ஆட்சியின் கீழ் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியாகும். இம் மாதிரியான அறிக்கைகள் 2012, 2013 ஆம் ஆண்டுகளிலும் வெளியிடப்பட்டன.
2014 ஆம் ஆண்டில் மலேசியாவில் மொத்தமாக 13 விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக 2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று விடுதலைப் புலிகள் ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக 2013 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பயங்கரவாத அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழித்து விட்டதாக கூறிய கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே இவையனைத்தும் இடம்பெற்றுள்ளன.படையினர் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து பயங்கவாதம் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் பின்னர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையையே இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ராஜபக் ஷ ஆட்சியின் தோல்விக ளையே இந்த அறிக்கைகள் எடுத்துக் காட் டுகின்றன. எனவே, இவ் அறிக்கைகள் எமது அரசை பற்றியதல்ல. அதேவேளை அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் எமது அரசாங்கம் உறுதியாக விருக்கிறது என்பதை இந்த சபைக்கு நான் வலியுறுத்துகிறேன்.
பயங்கரவாதம் தொடர்பில் எப்போதும் எமது உறுதியான நிலைப்பாடு இது தான். தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் பற்றிய அமெரிக்க அரசின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆதரவு வலையமைப்புக்களை பலவீனப்படுத்துவதற்கு இலங்கையில் பணியாற்றிய நாடுகளுடனாக இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் எமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அத்தோடு, நிதிசேகரிப்பு வலையமைப்பை முடக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றது.
அதேபோன்று நாட்டுக்குள் பிரவேசிக்க விருக்கும் பயணிகள் பற்றிய தகவல்களை இலங்கை குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கும் முன்கூட்டிய பயணிகள் தகவல் முறைமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிவரவு திணைக்களத்துடன் எமது அரசாங்கம் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
2006 ஆம் ஆண்டு நான் வெளிநட்டு அமைச்சராக இருந்தபோது விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் முதலில் தடைசெய்தது.
ஆனால் 2014 ஆண்டில் இத் தடை இடை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் எமது அரசு ஆட்சிக்கு வந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த அமைப்பு மீண்டும் தடைசெய்யப்பட்டது. தங்களது வன்முறை நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிப்பதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளின் ஊடாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுபவர்களுடன் இடம்பெயர்ந்தோர் அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி குரல் கொடுப்பவர்களை சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.
எமது நாடு கடந்த கால வன்முறைகளில் இருந்து சுமுகமான நிலைமைக்கு திரும்புவதில் இந்த வித்தியாசப்படுத்தல் முக்கியமானதாகும்.
தமிழர் அரசியலில் மிதவாத குரல்களும், தமிழ் மக்களின் நேர்மையான பிரதிநிதிகளுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது பிளவுபடாத ஐக்கிய இலங்கையை வலியுறுத்திப் பேசுகின்றனர்.
எமது ஜனநாயக ஸ்தாபனங்களில் முழுமையாக பங்குபற்றுவதற்கு குறித்த நபர்களைத் தான் நாம் ஊக்குவிக்க வேண்டும். எமது சமூகத்தில் அடிப்படைவாத சக்திகளை ஒழிப்பதற்கு இவர்களுடன் தான் நாம் நெருங்கி சேவையாற்ற வேண்டும்.
ஜே.வி.பி.யினர் பிரதான அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டதைப் போன்று தமிழ் மக்கள் அவர்களது துயரங்களை அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக வெளியிடுவதற்கு நம்பகமான அரச பொறிமுறைகள் மற்றும் வன்முறையற்ற ஆதரவாளர்கள் மூலம் அம் மக்களை நாம் தற்போது வலுவூட்ட வேண்டும்.
எமது நாட்டில் பாதிக்கப்பட்ட சமூகங்களை நாம் தனிமைப்படுத்தி தீவிரமயப்படுதப்படுவதால்தான் வெளிப்படக்கூடிய பயங்கரவாதத்தின் புதிய வடிவங்களை பற்றி எதிர்வு கூறுவது கஷ்டமாக இருக்கும் என்பதுடன் கட்டுப்படுத்துவதற்கும் கடினமானதாக இருக்கக் கூடும்.
குறிப்பாக அவை சிறியவையாகவோ அல்லது பூகோளவியல் ரீதியாக சிதறுண்டு கிடப்பவையாகவோ இருக்கும் பட்சத்தில் அவற்றுடன் தொடர்புபட்டவர்களை இலக்கு வைப்பது எந்த இராணுவத்துக்கும் கடினமானதாகவே இருக்கக் கூடும்.
மோசமாக திட்டமிடப்பட்ட அல்லது உள்வாங்கப்படாத தந்திரோபாயங்கள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான தோல்விகள் காரணமாக எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் எம்மால் ஆபத்தில் தள்ள முடியாது.
வன்முறைகளின் மூல காரணிகளை தீர்ப்ப தற்கும் உலகளவில் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை பயன்படுத்துவதற்கும் அந் நாட்டு குற்றவியல் நீதி முறைமையை மேம் படுத்துவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வாய்ப்புக்களை அதிக ரிப்பதற்கு இதுதான் சரியான நேரம்.
ஆவே நம்பிக்கையை கட்டியெழுப்புதல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி பற்றிய இந்த பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து சமூக மக்களினதும் விசேடமாக வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மை இன சமூகங்களின் உண்மையான துயரங்கள் மற்றும் கவலைகளை தீர்ப்பதில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய இதுதான் சரியான வழி என்றார்.








