Breaking News

நாடுகளின் மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை இன்று வெளியாகிறது

உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக முக்கியமான அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இன்று காலை 10.15 மணியளவில் (வொசிங்டன் நேரம்) நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிடவுள்ளார்.

ஆண்டு தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தகவல்கள் இடம்பெறும். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி மேலதிக தகவல்களை வழங்குவதுடன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அமெரிக்கா காட்டமான கருத்துக்களை தனது அறிக்கையில் குறிப்பிட்டு வந்தது.

எனினும், தற்போது இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அமெரிக்காவுடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, வரும் செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் நிலை எவ்வாறானதாக இருக்கும் என்பதை, இன்று வெளியாகவுள்ள அறிக்கையில் இருந்து ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் என்றும் கருதப்படுகிறது.