போர்க் குற்றங்கள் தொடர்பாக சவேந்திரவிடம் விசாரணை! ஐனாதிபதி ஆணைக்குழு
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐனாதிபதி ஆணைக்குழு, இறுதிப் போரில் முக்கிய பணியாற்றிய படையணியின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. கடுமையான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படுகின்றன. போர் முடிந்த கையோடு ஜக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிவதிவிடப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்தியாவிலுள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்கை நெறி ஒன்றை பயின்று வருகிறார்.
விரைவில் இலங்கைக்கு வந்து அவர் ஆணைக்குழு முன் சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தும் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் நேற்று உறுதிப்படுத்தினார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டது,
மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூவர் கொண்ட ஆணைக்குழு. பின்னர் இந்த ஆணைக்குழுவின் பணிப்பரப்பு போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் விரிவாக்கப்பட்டது. அதன்படி இராணுவத்தினரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது ஆணைக்குழு. அதன் ஓர் அங்கமாக, போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தது.
போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது. 59ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, 55ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட கமால் குணரத்ன ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.