Breaking News

இலங்கை தரப்பின் கருத்துக்களால் இந்தியா அதிருப்தி!

மீனவர் விவகாரத்தில் இலங்கை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து இலங்கைக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக் கவுள்ளது.

புதுடெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை தரப்பில் இருந்து வெளியாகும் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் குறித்து, இந்தியா கவலையைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கைகள் இந்த விவகாரத்தில் பேச்சுக்கான சூழலை பாழாக்கி விடும். மீனவர் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா முன்வைத்த யோசனையை இலங்கை நிராகரித்து விட்டது. நாம் இதனை ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்க்கிறோம். அவர்களின் மீனவர்கள் எமது கடற்பகுதிக்கு வந்து மீன்பிடிக்கிறார்கள். எமது மீனவர்கள் அவர்களின் கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அப்போது அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இது ஒரு வாழ்வாதாரப் பிரச்சினை, வேறு வழிகளில் அன்றி மனிதாபிமான அடிப்படையில் தான் இதற்குத் தீர்வு காண வேண்டும், என்று அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியுள்ளது. இலங்கை தரப்பில் இருந்து பெரிய அறிக்கைகள் வருகின்றன. அவற்றில் சில மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளன.

எனவே இத்தகைய ஆத்திரமூட்டும் கருத்துக்கள் பேச்சுக்காள சூழலைப் பாழ்படுத்தி விடும் என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளோம். இனிமேல் எந்தப் பேச்சுக்களும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே இடம்பெறும், மனிதாபிமான அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஆண்டுக்கு 65 நாட்கள், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும்படி, இந்தியா முன்வைத்த யோசனையை கொழும்பு நிராகரித்து விட்டதாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். 65 நாட்கள் இல்லை, 65 மணி நரம் கூட அவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.