எம்மை அழிக்க கட்டமைக்கப்பட்டோரின் விளைவுகளே சமூக விரோத சம்பவங்கள் - சி.சிறிதரன்
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொடுரமானதும் அருவருக்கத் தக்கதுமான சமுக விரோத சம்பவங்கள் போரின்பின்னர் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளாகவே காணப்படுகின்றது.
எமது மக்களின் மனோநிலை பண்பாடு என்பன சிதைக்கப்பட்டு இன அடையாளங்கள் அற்ற நிலையில் வாழ விடுவதே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாக இருக்கின்றது என யாழ் .மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கருத்தாடல் நிகழ்வொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒரு தேசத்தையோ அல்லது ஒரு இனத்தையோ வரையறுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை மூலம் அழித்து விடமுடியாது. ஆதலால், ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், பல்வேறு நகர்வுகளை கட்டம் கட்டமாக முன்னெடுப்பர். இவை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டமைப்பு சார் அடிப்படையில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. நேரடியான நகர்வுகள் இலக்குவைக்கப்பட்ட சமூகத்தை உடனடியாக உலுப்பும். மறைமுகமானதும் கட்டமைக்கப்பட்டதுமான நடவடிக்கைகள் நீண்டகாலத்தில் குறித்த தேசத்தை, இனத்தை நிர்மூலமாக்கும்.
இனஅழிப்பையும் தொடர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது தனித்த நேரடியான ஆயுதப் போர் மட்டுமல்ல. மாறாக, ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பை, அதன் பண்பாட்டை, அடையாளத்தை மற்றும் பொருண்மியத்தை பல்வேறு வழிவகைகளில் பலவீனப்படுத்தி இறுதியில் பேரழிவை உண்டுபண்ணுவதே இனஅழிப்பின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படை.
முள்ளிவாய்க்காலில் எமது தேசம் சந்தித்த இனஅழிப்போடு எம் மீதான இனஅழிப்பை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரவில்லை. கூட்டுமனோதிடம் உடைக்கப்பட்டு, சமூக கட்டமைப்புகள் சிதைவடைந்து, பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஒரு இனத்தின் இருப்புக்கான அத்தனை அம்சங்களும் ஆட்டம் கண்டிருந்த எமது தேசத்துக்கு எதிராக உடனடியாக கட்டமைப்புசார் இன அழிப்பை இலங்கை ஆட்சிபீடம் தீவிரமாக முடுக்கிவிட்டது.
வித்தியாவிற்கு நீதி வேண்டி நடந்த போராட்டத்துக்கு பங்கம் விளைவித்து, வன்முறைக் கலாசாரத்தை கட்டவிழ்த்துவிட்டதன் பின்னணியில் மூன்று துணை இராணுவக்குழுக்கள் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. இந்த மூன்று தரப்புகளையும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ஒரு துறையே வழிநடத்தியதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்ததுறை இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி செயற்படமுடியாது என்பதையும் நாம் அறிவோம். இந்தத்துறையே கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை படுகொலை செய்தமை, கடத்தல் காணாமல் போதல்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டமை பலரும் அறிந்ததே.
தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள பின்னணியிலேயே, காவற்றுறையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறைகள் வெடித்துள்ளது. ஆதலால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முகமாக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையையும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. இது இராணுவத்தை எந்தவொரு காரணம் கொண்டும் வெளியேற்ற மாட்டோம் என்று கூறிவருகின்ற தரப்புகளின் வாதத்தை பலப்படுத்துவதற்கான ஒரு நகர்வாக பார்க்கப்பட வேண்டும். இதனூடாக தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைப் பேணுவதே நோக்க மாகவுள்ளது என்றார்.