கட்சியை நான் பிளவுபடுத்தவில்லை - மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் பிளவுபடுத்தவில்லை. கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
கலாவெவ 500 ஏக்கர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியை நான் பிளவுப்படுத்த முயற்சிப்பதாக சிலர் என் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தவே நான் வெளியில் இறங்கி பேசி வருகிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தினேன் என்று என்மீது குற்றம் சுமத்தி பயனில்லை.
அம்மாவிடம் இருந்து மகள் கட்சியை உடைத்து கொண்டு சென்ற போது நான் கட்சியிலேயே இருந்தேன். மகன் கட்சியை உடைத்து கொண்டு சென்ற நேரத்திலும் நான் கட்சியிலேயே இருந்தேன். பொதுச் செயலாளர் சென்ற நேரத்திலும் நான் கட்சியிலேயே இருந்தேன். கட்சியை பிளவுப்படுத்தியது நானல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பது டாலி வீதியில் 301 ஆம் இலக்கத்தில் இருக்கும் கட்டிடம் அல்ல. அறிவிப்பு பலகையல்ல. சின்னம் அல்ல. 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடவில்லை. 91 ஆம் ஆண்டே இறுதியாக கைச்சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த வரலாறு மறந்து போய்விட்டது. மக்களுக்கும் மறந்து விட்டது. நாமும் மறந்து விட்டோம். அரசியல்வாதிகளும் மறந்து விட்டனர். தற்போது ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா என்று வாயில் வந்தது போல் சத்தமிடுகின்றனர்.
நாட்டின் பஞ்ச மகா சகதிகள் எங்கே. மக்களின் இதயங்களிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாளுகிறது. கொள்கைகளிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாளுகிறது என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.