லசந்த கொலையில் திடீர் திருப்பம்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைக் கைதி ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வேறொரு குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும், அத்தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுப் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் ருவான் குணசேகர தெரிவித்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் பல தகவல்களை வழங்கியுள்ளார் எனவும், அத்தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைதாகியிருந்தனர்.
இவர்களில் ஒருவர் பின்னர் மரணமடைந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.








