Breaking News

ஷிராந்தி மீதான குற்றச்சாட்டுக்கு மஹிந்த பதில்

அண்மையில் தங்காலை பகுதியில் விபத்துக்குள்ளான சிரிலிய சவிய அமைப்புக்குச் சொந்தமான பதிவு செய்யப்படாத பரடோ ஜீப் (Prado jeep) ரக வாகனம், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானது அல்ல என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

குறித்த வாகனம் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை அடுத்து, உலக உணவுத் திட்ட அமைப்பினரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களில் ஒன்று என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு பயன்பட்டது என்பதால் மோட்டார் வாகன பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாது, விஷேட சிவப்பு இலக்கத் தகடுடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பின்னர் உலக உணவுத் திட்டத்தால் கைமாற்றப்பட்ட குறித்த வாகனம், ஜீ.ஆர். 109, ஜீ.ஆர்.114 ஆகியன 2012ம் ஆண்டு சிரிலிய சவியவிடம் கிட்டியது. பதியப்படாத இந்த வாகனங்களை பதிவு செய்ய அதிக வரி செலுத்த வேண்டி இருந்ததால் இவை பயன்படுத்தப்படாமல் வீரஹெடிய பகுதி நிலம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இவற்றை பயன்படுத்த சிரிலிய சவிய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை, அத்துடன் சிலர் கூறுவது போல் அது ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனமும் இல்லை என மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டு ஒன்று குறித்தும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான நிதியை தனது சொந்த கணக்குக்கு மாற்றி அதனை பயன்படுத்தி ஷிராந்தி ராஜபக்ஷ வீடு ஒன்றை கொள்வனவு செய்ததாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு ஷிராந்தியிடம் விசாரணை நடத்தியது, குறித்த சொத்தினைக் கொள்வனவு செய்ய ஷிராந்தி ராஜபக்ஷவின் உறவினரான தில்ஷான் விக்ரமசிங்க எனும் வர்த்தகர் 35 மில்லியன் கடன் பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே இந்த சொத்தினைக் கொள்வனவு செய்ய சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான நிதி பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.