Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்னை துரோகி போல் கவனித்தது!

நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிக் கொண்டதாகவும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எனவே எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற்றாலும் 100 நாட்களில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாணவர் அணி இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.