சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு மஹிந்தவே காரணம் - குற்றம் சாட்டுகிறார் சந்திரிகா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரண மாகும்.
எனது தாயாரது காலத்திலிருந்து அவரே கட்சியை பிளவுபடுத்தும் பிரதான வகிப்பாளராக செயற்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இலங்கை அரசியலில் கட்சிப்பிளவு என்பது சாதாரண விடயமாகும் என்று அக் கட்சியின் பிரதான ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளமையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர்கள் நினைவில் வைத்து செயற்படவேண்டும் எனவும் அவர் கோரினார். மேலும் இலங்கை வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த 9 ஆண்டுகளின்போது கடன் அதிகளவில் பெற்றுக்கொண்டு, மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளார்.
அத்துடன் நிதி ஒதுக்கீடு இல்லாமல் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளார். முன்னைய அரசின் செயற்பாட்டினால் தற்போதைய அரசாங்கம் பாரியளவில் சிக்கல்களுக்கு முகங்ககொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு கோட்டையிலுள்ள நிதி அமைச்சில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் இருவரும் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. முன்னைய அரசின் பொருளாதார கொள்கையினால் நாட்டிற்கு பாதிப்புகள் ஏற்படலாயிற்று. முன்னைய அரசின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் காரணமாக சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையுடன் முதலீடு செய்யவில்லை.
முன்னைய அரசினால் விட்டுசென்ற பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றமையினால் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. முன்னைய ஆட்சியின் போது எந்தவொரு கேள்விக் கோரல்கள் இல்லாமல் அபிவிருத்தி திட்டங்கள் தரகுதாரர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான அபிவிருத்தித்திட்டங்களுக்கு உரிய வகையில் நிதி ஒதுக்கிடப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை என்னுடைய ஆட்சிக்காலத்தின் போது இலங்கையின் ஆறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக சீன அரசாங்கத்துடன் குறைந்தளவிலான தரகு பணத்திற்கு முதலீடு செய்யப்பட்டது.
இதன்போது நாம் மிகவும் தரமான நிறுவனங்களுடனேயே ஒப்பந்தினை மேற்கொண்டோம். இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு அதிகாரம் சென்றதன் பின்னர் குறித்த ஆறு அபிவிருத்தி திட்டங்களையும் 80 சதவீத தரகு பணத்திற்கு சர்வதேச தரமற்ற சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு மாத்திரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் 510 பில்லியன் ரூபா தரகு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடன் பெறாத அளவிற்கு 9 சதவீதம் சர்வதேச நாடுகளிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடன் பெற்றுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் காரணமாக தற்போதைய அராசாங்கம் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
ஐ.தே.கவுடன் இணைய மாட்டேன்
நான் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமையானது எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டமைக்கு ஒப்பாகாது. நான் எந்த சந்தர்ப்பதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப்போவதில்லை. முன்னைய அரசாங்கம் என்னுடைய கட்சியாக இருந்த போதிலும் நாட்டின் பொருளாதாரத்தின் மீது நான் மிகவும் அக்கறை கொண்டவள்.
ஆகையால் எனது கொள்கையை என்றைக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. நான் கொள்கையை கட்டிக்காப்பதில் மிகவும் அக்கறை கொண்டவள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கொள்கையை தொடர்ந்தும் மீறிக்கொண்டே வந்துள்ளது. தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பிளவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டமையை எண்ணி வருந்துகிறேன். இந்த கட்சிப் பிளவுகளுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாகும். எனது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இல்லாமல் இரத்துச் செய்யப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரபால சேனநாயக்க உள்ளிட்ட 13 பேர்களை இணைந்துக் கட்சியை பிளவுப்படுத்த முனைந்தனர். எனினும் அந்த காலப்பகுதியில் கட்சியில் சிரேஷ்ட தலைவர்கள் இருந்தமையினால் கட்சி பாதுகாக்கப்பட்டது. எனினும தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் இல்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று ஜனநாயக பண்பு கொண்ட தலைவர் தற்போது கிடைத்துள்ளமையினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட கூடியவர்கள் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
கல்வித் தகைமையற்றோரே பாராளுமன்றத்தில்
இதேவேளை தற்போதைய பாராளுமன்றத்தில் கல்வித் தகைமையற்றோரே பாராளுமன்றத்தில் உள்ளனர். அதனைவிட பெரும்பாலோனோர் போதைப்பொருள் விற்பனையாளர்களே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும் நாட்டில் அபிவிருத்தி செயற்த்திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்திற்கே அதிகளவில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாகும்.
மஹிந்தவின் மீதான விசாரணைகள் துரிதம்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான நிதி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது நல்லாட்சி நிலவுவதனால் சட்டத்திற்கு மதிப்பளித்து அதற்கேற்றால் போலவே விசாரணைகள் நிறைவுபெறும். வெ ள்ளை வேன் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றார்.