Breaking News

இலங்கை தேர்தலைக் குறிவைத்து செயற்படுகிறதாம் இந்தியாவின் ‘ரோ’

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ரோ, பரப்புரையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியி ட்டுள்ளது.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவரே திவயினவுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலில் தமக்குச் சாதகமாக கையாளக் கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்குவது, ரோ அமைப்பின் இந்தப் பரப்புரையின் நோக்கம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தம்மை உருமறைத்துக் கொண்டு பல்வேறு வடிவங்களில், ரோ அதிகாரிகள் சிறிலங்காவில் தங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால், ஹிந்தி மொழி தெரிந்தவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது வடக்கிலுள்ள மக்கள் பற்றிய தகவல்கள் அடிமட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒரு வலையமைப்பை உருவாக்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்றும் உள்ளூர் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஒரு பதிவு நடவடிக்கையை இந்தியத் தூதரகம் முதல்முறையாக மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.