Breaking News

வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு எதிர்ப்பு

இலங்கையில் தீர்வாக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள தேர்தல் அறிக்கைக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பு தோன்றியுள்ளது. 

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனி மாகாணமாகவே இருக்க வேண்டும் என்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. 

இனப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வை கொண்ட அரசியல் தீர்வான்று காணப்படும்போது அது இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகின்றது. 

இது தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றிடம் பேசிய வழக்கறிஞர் உவைசுர் ரகுமான் .இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த இரு மாகாணங்களும் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

மீண்டும் இரு மாகாணங்களும் இணைக்கப்படுமானால் அதனை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். கிழக்கு மாகாணத்தில் 35 சதவீதமாக காணப்படும் முஸ்லிம்களின் விகிதாசாரம் வடக்கு - கிழக்கு இணையும் போது 18 சதவீதமாக குறையும் ஆபத்து இருப்பதாக சமூக செயற்பாட்டாளரான எம்.எஸ்.எம். நஸீர் கூறினார். 

இதனைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்கிறார் ஓய்வுபெற்ற அரச அதிகாரியான எஸ்.ஏ. ஐனுடின். வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழமையான தேர்தல் கோஷம். இது ஒரு போதும் சாத்தியப்படக் கூடியது அல்ல என கிழக்கு மாகாண சிங்களவர் அமைப்பு கூறுகின்றது 

நாட்டில் எந்தவொரு தலைவரும் இதற்கு இனிமேல் இணங்கப் போவதும் இல்லை. அப்படி இணைப்பதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதும் இல்லை என்று அமைப்பின் தலைவரான அனுர பண்டார குறிப்பிடுகின்றார்.