Breaking News

"இறுதிப்போரில் காணாமல் போனோர் விவரங்கள் செப்டம்பரில் வெளியிடப்படும்"

இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலான விவரங்களை இலங்கை அரசு இரண்டு மாதங்களில் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என இலங்கையின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அப்போது அரசதரப்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்களில் இவை இடம்பெறும் என அமைச்சர் அஜித் பெரேரா உறுதிப்படுத்தினார்.

அரசு அந்தப் பிரச்சினையை உணர்ந்துள்ளது, அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்புகிறது என்றாலும் பல சிக்கல்கள் உள்ளதாலேயே அந்தத் தகவல்களை உடனடியாக அரசால் வெளியிட முடியாமல் உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

காணாமல்போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் நியாயமானவையே என்பதை இலங்கை அரசு முற்றாக அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்டத் தகவல்களும் உள்ளன என்று கூறும் அமைச்சர் அஜித் பெரேரா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசு சில தகவல்களை வெளியிடும் என்றார்.

இது தொடர்பிலான விபரங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 250க்கும் குறைவான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உள்ளனர் என்றும், அந்தப்பட்டியல் நீதி அமைச்சகத்திடம் உள்ளது எனவும் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் தெரிவித்தார்.