பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரணம் கொலை என சந்தேகம்!
இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவர் கடந்த 06/07/2015 அன்று தீக்காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்.
இம்மாணவியின் மரணம் தொடர்பில் விரிவுரையாளர் DR. ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) என்பவர் மீது பெற்றோர், உறவினர், மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மாணவியின் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணியான திரு. அன்ரன் புனிதநாயகம் இம் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை நேரடியாகவும் ஆவணமாகவும் நீதிமன்றில் வெளியிட்டார்.
மரணமடைந்த மாணவியின் முன்புறம் தீக்காயங்களுக்கு உள்ளாகாமல் பின் புறமே எரிந்துள்ளது.
அவர் அணிந்திருந்த ஆடைகள் எரிந்த பின் சந்தேக நபரால் களையப்பட்டு பூச்செடிக்குள் மறைத்து வைக்கப்பட்டது. ஆயினும் அவர் அணிந்திருந்த உள்ளாடைகள் நெருப்பில் எரியவில்லை. இருப்பினும் இவ் தடயப்பொருட்கள் பொலிசாரினால் இதுவரை மீட்கப்படவில்லை.
தடயப்பொருளாகிய இவ் ஆடைகள் சந்தேக நபரால் மறைக்கப்பட்டுள்ளது.
70% வீதம் எரிந்துள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. ஆயினும் தலைமுடியோ முகம் உட்பட தலைப்பகுதியோ கால்களோ மார்புப்பகுதியோ நெருப்பில் எரியவில்லை. அத்துடன் மாணவி எரிந்தபின் தாமாகவே நடந்து வந்து முச்சக்கர வண்டியில் ஏறி வந்துள்ளார். வைத்திய சாலையிலும் தாமாகவே நடந்து சென்றுள்ளார்.
வைத்திய சாலையில் வைத்தே சிகிச்சையளிப்பதற்கு என மாணவியின் நீளமான தலைமுடி கத்தரிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் வைத்து உறவினர்களுடன் கதைக்கமுடியாதபடி தொடர்ச்சியாக மயக்க மருந்து ஏற்றப்பட்டுள்ளது. மாணவியின் தாயார், உறவினர்கள் மூன்று நாட்களாக வருந்திக் கேட்டபோதும் மாணவியுடன் கதைப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், ஒரு தடவை மயக்கம் தெளியும் நிலையில் தாயின் குரலைக்கேட்டு மாணவி இரு தடவைகள் அம்மா என அழைத்த போது மாணவியின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவந்துள்ளது. அப்போது அங்கு கடமையில் இருந்தவர்கள் தாயாரை வெளியே அனுப்பிவிட்டு மீண்டும் மயக்க மருந்தினை ஏற்றி உள்ளார்கள். அத்துடன் சந்தேகநபரான வைத்தியர் DR. ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) என்பவர் தொடர்ச்சியாக மாணவி இறக்கும் வரைக்கும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள்ளே அவரினை அனுமதித்தமை.
தலையில் அடிகாயம் உண்டு என சட்ட வைத்திய அதிகாரியிடம் மாணவியின் தாயார் பிரேத பரிசோதனைக்கு முன்பாக எடுத்துக்கூறி உள்ளார். ஆயினும் இப் பிரேதப் பரிசோதனையின் போது மாணவியின் தலையின் பின் பகுதி அகற்றப்படுள்ளது. இது இவ்வாறிருக்க பல்கலைக்கழகம் படிக்க சென்ற மாணவியை குறிப்பிட்ட சந்தேக நபரான மருத்துவத்துறை விரிவுரையாளர் (டெமோ) DR. ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் யாழ்ப்பாணத்தில் வைத்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். இச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே பெற்றோருக்கு இவ்விடயம் தெரியவந்துள்ளது என மன்றில் தெரிவித்தார்.
தேவை ஏற்படும்போது மாணவியின் முக்கிய உறுப்புக்கள் விசாரணைக்காக மீள எடுக்கவும் நீதிமன்றத்தின் அனுமதியை வேண்டினார்.
இவ் அதிர்ச்சியுற்ற தகவல்களை மிகவும் கூர்ந்து கவனித்த நீதிபதி பொலிசாரின் அசமந்தபோக்கினை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக மீள் விசாரணைக்கு உத்தரவிட்டு அது தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18/09/2015 அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினமே இவ் வழக்கு மீளவும் நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாணவியின் தரப்பில் ஆயரான சட்டத்தரணியான திரு. அன்ரன் புனிதநாயகத்துடன் இணைந்து சட்டத்தரணியான திரு. றேமிடியஸ் அவர்களும் மாணவியின் சார்பாக முன்னிலையாகி பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். இவ் வழக்கு இடப்பெறும் வேளையில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அநேகமான நபர்கள் வந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.








