எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த நிராகரித்தார்?
புதிதாக நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ள மகிந்த ராஜபக்ச, எனினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிராகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்குக் காரணம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மோதலைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தேசியப் பட்டியல் குறித்தோ, வேறு சட்டரீதியான விடயங்கள் குறித்தோ, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் மோதலைத் தவிர்த்து செயல்படுவதற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, தேர்தல் ஆணையாளர்களைச் சந்தித்த சுசில் பிரேம்ஜயந்த பின்னர் ஜனாதிபதியின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையுடன் தேவையற்ற மோதலை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லையென சுசில் இதன்போது அறிவித்துள்ளார். அத்துடன் தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் தேவையற்ற மோதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் மகிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்குமாறு மகிந்த ஆதரவாளர்கள், மகிந்தவை வற்புறுத்தி வருவதாகவும் அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணங்கிச் செல்வதா? அல்லது தமது ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதா என்பது குறித்து மகிந்தவிற்கு நெருக்கமானவர்கள் விரிவாக ஆராய்ந்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








