Breaking News

சர்வதேச விசாரணையே வேண்டும் - சிறிதரன்

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை யொன்று நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா கூறினால், அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. 


நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று சர்வதேச விசாரணையையே தொடர்ந்து கோருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். 

போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் கூறியிருக்கின்ற நிலையில், தமிழ் மக்களின்  நலன் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை குறித்து சிறிதரனிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 'கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று நாங்கள் செயற்படுவோம். அமெரிக்கா சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் புரிந்தவர்கள் தங்களைத் தாங்களே விசாரிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டாயம் தேவையானதொன்று. அதன்மூலமே தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும். மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்' என்றார்.