தமிழ்க் கூட்டமைப்பை உடைக்க மஹிந்த திட்டம் - கயந்த கருணாதிலக குற்றஞ்சாட்டு
கடந்த காலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த முயற்சிக்கின்றார்'' என்று ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றஞ்சாட்டினார்.
கட்சித் தலைமையகமான சிறி கொத்தவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசியல் கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும், கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சியிலும் மஹிந்த ராஜபசக் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்த முடியுமா என்று அவர் முயற்சித்திருந்தார்.
அதேபோல ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்குள் பிளவுபடுத்த முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் அந்தக் கட்சியையும் பிளவுபடுத்த முயற்சித்துள்ளார். சுயநோக்கத்திற்காக தமது சொந்தக் கட்சியையும் பிளவுபடுத்த அவர் பின்நிற்கப்போவதில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று இரண்டாகப் பிளவடைந்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ச பிரதமராவதற்கான முயற்சி ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், அவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் குழுவும்கூட இன்று பிளவுபட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச பங்கேற்கும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் சில உறுப்பினர்கள் பயப்படுகின்றனர். ஏனென்றால், அண்மைக்காலங்களில் மஹிந்த ராஜபக்ச வின் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் கூச்சலிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
தோல்வியுற்ற மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அரசியலுக்கோ அல்லது தலைமைத்துவத்திற்கோ வருவதை வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதையே அந்தச் சம்பவங்கள் உதாரணமாகின்றன' என்றார்.