Breaking News

வெள்ளைக்கொடி விவகாரத்தில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது ஐதேக – சுசில்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை படையினரைக் காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய அரசாங்கம் பொறுப்பில்லாமல் செயற்படுகிறது.

இந்த விவகாரத்தில் இராணுவத்தை காப்பாற்றாமல், அனைத்துலக விசாரணையில் சிக்கவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. கசிந்துள்ள, ஐ.நா அறிக்கையின் இரகசியங்களிலும், சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கோள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.சனல்-4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே தொடர்ச்சியாக ஆவணங்களை உருவாக்கி ஐ.நா ஆணைக்குழுவிடம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால் இவர்கள் முன்வைக்கும் ஆவணங்கள் அனைத்தும் பொய்யானதே. நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்படங்களும் உண்மைக்கு முரணானதாகும். இவர்கள் அனைவரும் பக்கசார்பான வகையில் தான் செயற்படுகின்றனர்.ஐதேகவுக்கும், அவர்களுடன் புதிதாக கூட்டு சேந்திருக்கும் நபர்களுக்கும் நாட்டையும், நாட்டை காப்பாற்றிய இராணுவத்தினரையும் காப்பாற்றும் நோக்கம் இல்லை.மாறாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கவே முயற்சிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.