வட்டுக்கோட்டைத் தீர்மானமும் கடந்துவந்த பாதையும்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் தீராதப் போராட்ட
உணர்வலையைத் தூண்டி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு 38 ஆண்டுகள் கடந்து விட்டன.
28 வருடங்கலாகப் போராடிவிட்டோம் இனியும் சிங்களத் தீவில் தமிழர்களின் உரிமைகளைக் கெஞ்சி பெற்றுக் கொள்ள முடியாது. தனி தமிழீழமே தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என 1976 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 29 ஆம் திகதி வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானத்தை தந்தை செல்வநாயகம் நிறை வேற்றினார்.
ஆங்கிலேயக் காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த பின்னர். இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளும், அடாவடி அரசியல் தீர்மானங்களும் சிங்கள அரசியல் தலைமைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டன.
டி.எஸ். சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைமைகள் தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு சிங்கள மக்களை இன வாதிகளாக மாற்றி தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சிங்கள இனவாதத்தைத் தமிழர்களுக்கெதிராக கட்ட விழ்த்துவிட்டனர்.
தந்தை செல்வா, ஜீ.ஜீ. பொன்னப்பலம் உள்ளிட்ட தலைமைகளின் போராட்ட உணர்வலைகள் நாடாளுமன்றம் எங்கும் கண்ணீர் மழைப் போல் சிந்தியதன் விளைவினால் 1957 ஆம் ஆண்டு பண்டா‡செல்வா ஒப்பந்தம் அரங்கேறியது. என்றாலும் அன்று பண்டாரநாயகக்கவினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர சூழ்ச்சிக்காரணமாக பண்டா‡செல்வா ஒப்பந்தம் என்பது வெறும் வெத்துப் பத்திரமாக கிழித்தெறியப்பட்டது.
அதன் பின்னர் 1965 ஆம் ஆண்டு டட்லி‡செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. அந்த ஒப்பந்தமும் இனவாதத்தின் கொதிநெருப்பில் வெந்து சாம்பலாய் போனது. தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முதல் முதலில் அரங்கேறிய இரண்டு ஒப்பந்தங்களும் தடம் தெரியாமல் போனது.
அன்று சிங்கள அரசியல் தலைமை கள் தங்களை அரசியல் பகடைக்காயாக மாத்திரமே பயன்படுத்தினர். என்பதை உணர்ந்த தந்தை செல்வநாயகம் தமிழர்களின் வாழ்விலும், வரலாற்றிலும் அழிக்கமுடியாத சுவடான வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத்தீவில் சிங்கள இனவாதத் துக்கெதிராகப் போராடிய தமிழர்களுக்கு உலகளாவிய அங்கிகாரத்தைக் கொடுத்தது வட்டுக்கோட்டைத் தீர்மானமே என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லையெனலாம்.
தமிழர்களுக்கு சிங்கள நாடு அரங்கேற்றுவது வெறும் இனவாதம் மாத்திரமே மாறாக நல்லிணக்கமும், நல்லாட்சியும் அல்ல என வட்டுக்கோட்டைத் தீர்மானம் உலகுக்கு உணர்த்தியது. என்றாலும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடத்தில் தமிழர்களின் வாழ்வு ஓர் இருண்ட வாழ்வாக மாறியது. அதாவது, 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் இறைவனடியெய்தினார்.
கம்யூனிஸத்துக்கு வித்திட்டவர் புரட்சியாளர் லெனின் போல் தமிழர்களின் விடுத லைக்கு முதல் முதலில் தந்தை செல்வநாயகத்தின் வட்டுக்கோட்டைத் தீர்மானமே வித்திட்டது. லெனின் வித்திட்ட கம்யூனிஸக் கொள்கைகளும், கருத்துகளும் இன்றளவும் உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
அதேபோல்தான் தமிழர்களின் அரசியல் விடுதலையிலும் சரி, உரிமைப் போராட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கொள்கைகளும், கருத்துகளும் ஆக்கிரமித்துள்ளன.
தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் வித்திட்டது வட்டுக்கோட்டைத் தீர்மானமேயாகும்.
இத்தீர்மானம் நிறைவேற்றியப் பின்னர் இலங்கைத் தீவில் சிங்கள இனவாதிகளின் இனவாதக்குரல் அலைபோல் திரண்டெழுந்தது. இனவாதத்தின் உச்சக்கட்டமாக ஆயிரக்கணக்கானத் தமிழர்களின் உயிர்கள் 1983 ஆம் ஆண்டு ஊழித்தாண்டவ மாடப்பட்டன.
தீராதச் சிங்கள இனவாதத்தின் விளைவினால் ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழீழ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடையமுடியுமென வேலுபிள்ளை பிரபாகனைத் தலைமையாகக் கொண்ட விடுதலைப் புலிகள் எனும் வீரப் புதல்வர்கள் எழுச்சியடைந்தனர்.
இது இனவிடுதலைக்காக எழுச்சி யடைந்த விடுதலைப் புலிகளின் வீச்சு என்பது தமிழர்களின் வரலாற்றில் அளவிட முடியாதது.
சிங்களத் தீவுக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கொள்கைகளுடன் உலகளாவிய ஒழுக்கங்களுடன் கட்டியெழுப்பட்ட விடுதலைப்புலிகளை வீரகளமாட வைத்தார் பிரபாகரன். இனக்கலவரத்தின் பின்னர் எழுச்சியடைந்த விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களை ஒன்றிணைத்து ஒரு தனித் தமிழ்த் தேசமாக தமிழ் ஈழத்தைக் கட்டியயழுப்பினர்.
தேசியத்தலைவரின் கொள்ளைகளின் உண்மைத்தன்மையும் இலங்கையின் தமிழர்களின் எதிர்காலம் கருதியும் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்கள் முழு அங்கீகாரம் வழங்கினர்.
இதன் அடிப்படையில் எழுச்சியடைந்த விடுதலைப் புலிகளை ஒரு கட்டத்தில் இந்தியாவினால்கூட கட்டுப்படுத்த முடியாது போனது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்த அன்று பிரதமராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன இந்தியாவின் அனுசரணையுடன் ஓர் இராஜதந்திர நகர்வை கையாண்டார்.
வடக்கு, கிழக்கை உள்ளடக்கிய தமிழர்களின் வாழ்விடத்தில் ஒரு சமஷ்டி ஆட்சி ஏற்படுத்துகின்றோம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனச்சூழ்ச்சியாக அந்த விடயத்தைக் கையாண்டார்.
அதன் அடிப்படையில் 13 ஆவது திருத்தச்சட்டம் கைச்சாத்திடப்பட்டது. பின்னர் விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி இலங்கையில் தமிழர்களுக்கான நியாயமானத்தீர்வை இந்தியா முன் வைக்கும் எனக்கூறி விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்தது மாத்திரமின்றி இலங்கையில் இந்திய அமைதிப்படையும் நிலைகொள்ள வைத்தது இந்தியா.
இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செய்த நாடகத்தை அறிந்த விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படைக்கெதிராக போரிட்டனர். பின்னர் இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த வெளியேறும் சூழல் ஏற்பட்டது. மீண்டும் தமிழர்களின் நிலம் பெரும்பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், இலங்கை யில் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் விடுதலைப் புலிகளுடன் பேசுவதன் மூலம் இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க மற்றும் நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளின் அனுசரணையுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
என்றாலும் அந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் பிரதிபலனை அடைவதற்கு முன்னர் சந்திரிகா குமாரதுங்கவினால் 2003 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அத்துடன், சந்திரிகாவும் சிம்மாசனத்தை விட்டுபோகவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் இலங்கையில் மஹிந்த ராஜபக்வின் ஆட்சி அரங்கேறியது. அதன் பின்னர் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பிலான பேச்சுகளும் ஏதும் ஏற்படவில்லை. அதற்கு மஹிந்தவும் தலை சாய்க்கத் தயாராக இருந்திருக்கவில்லை.
மாவிலாறு அணை மூலம் ஏற்பட்ட பிரச்சினை மிகக்கொடூர யுத்தமாக மாறி தமிழர்களின் உயிர்கள் பந்தாடப்பட்டன. சுமார் மூன்று வருடகாலம் மஹிந்த ராஜபக்ச அரசினதும் உலக வல்லாதிக்கச் சக்திகளின் அகோரத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாதுபோன விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டு மெளனிக்கப்பட்டனர்.
தமிழர் தாயகத்தில் மஹிந்த ராஜபக்வின் கொடூர யுத்தத்தினால் லட்சகணக்கானத் தமிழர்களின் உயிர்கள் காவுகொல்லப்பட்டன. அது மாத்திரமின்றி தமிழர்களின் உடைமை, நிலம், உரிமை, கலாசாரம் என அத்தனை அம்சங்களும் சூறையாடப்பட்டன.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் அரசியல் உரிமைகள் கேள்விக்குறியானது. என்றாலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சி மீண்டும் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சிக் கொடுத்தது.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்வின் அரசுக்கு பாரிய சவால் விடும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சி விருத்தியடைந்திருந்தது. யுத்தத்திற்கு உதவிய நாடுகள் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசிய அரசியலை புலம் பெயர் தமிழ் சமூகம் மூலம் சர்வதே ரீதியில் கட்டியெழுப்பப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களின் தீராதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு இலங்கை பதில் சொல்ல வேண்டுமெனக் கோரி ஐ.நா. யுத்தக் குற்ற விசாரணை மேற் குலகின் அனுசரணையுடன் கடந்த வருடம் ஐ.நாவில் நிவைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மார்ச் மாதம் வெளியிடப் படவிருந்த ஐ.நா.யுத்தக் குற்ற அறிக்கை இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் காரணமாக எதிர் வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளு மன்றத் தேர்தல்களம் சூடுபிடித்து காணப்படுகின்றது. இலங்கையில் சுயாதீன உள்நாட்டு பொறிமுறை ஏற்படுத்தப்படும் என்று கூறிய மைத்திரி அரசினால் இன்று வரை சுயாதீனப் பொறிமுறைக்கான அத்திவாரத்தைக் கூட போடமுடியாதுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா அறிக்கையில் தமிழர்களுக்கு ஏதும் நன்மை கிடைக்காதா என எண்ணி எண்ணி தமிழர்கள் தம்முடைய நாட்களை கடத்தி வருகின்றனர்.
எனவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழத் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் எழுச்சியடைந்திருந்தாலும். 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் தமிழர்களின் போராட்டம் இலங்கை அரசியலிலும் சரி தனித்துவத்திலும் சரி ஓர் உணர்வு கலந்தப் போராட்டமாக அல்லாமல் தேய்வடைந்த நிலையிலேயே பயணித்து வருகின்றது.
சிங்கள அரசிடமிருந்து ஒருபோதும் தமிழர்களின் சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற விடயம் இன்று நேற்று தோற்றம் பெற்றதல்ல. 67 வருடகால விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட விரக்த்தியாகும். இலங்கையில் இடம் பெற்றது தமிழ் இனப்படுகொலை எனப் போருக்கு உதவிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
அத்துடன் ஐ.நாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.
67 வருடகாலம் இடம்பெற்ற விடு தலைப் போராட்டத்தை இன்னும் சில காலம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டமாகத் தமிழ்த் தேசியத் தலைமைகள் கொண்டு செல்லுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதிபலனை அடையமுடியும் என்றே நம்பப்படுகின்றது.
சு.நிஷாந்தன்