ஜெனிவா விரைகிறது இலங்கை தூதுக்குழு!
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தூதுக்குழுவினர் ஜெனிவா விரைந்த வண்ணம் உள்ளனர்.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு ஜெனிவா நோக்கி பயணமாக ஏற்பாடாகியிருந்தது. அத்துடன் இன்று சனிக்கிழமை அதிகாலை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்
ஜெனிவாவுக்கு பயணமாவதற்கு ஏற்பாடாகியிருந்தது. நாளை மறுதினம் ஆரம்பமாகும் ஜெனிவாக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவினரே இம்முறை கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை இம்முறை கூட்டத் தொடரின் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் கோரிக்கை விடுக்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உள்ளக விசாரணை பொறிமுறையினை முன்னெடுக்க கால அவகாசம் வழங்கும் நோக்கில் இந்த கோரிக்கையை ஆணையாளர் விடுக்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ளார். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜெனிவா செல்லும் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , விஜயதாச ராஜபக்ஷவும் நாளை மறுதினம் திங்கட் கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளனர்.
இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இலங்கை தொடரபில் ஜெனிவா மனித உரிமை அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணைஅறிக்கை மீதான விவாதம் இம்முறை கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளதுடன் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணை ஒன்றையும் கொண்டுவரவுள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை வெளிக்காட்டும் நோக்கில் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு போதிய கால அவகாசம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தக் கூட்டத்தொடரின்போது இலஙகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளன. விவாதத்தின் இறுதியில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மட்டத்தில் ஒருவர் பதிலளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா இறுதியாக கொண்டுவந்த பிரேரணையின் பிரகாரமே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று குறித்த பிரேரணையில் கோரப்பட்டிருந்தது.
இநநிலையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்த விசாரணையை முடித்துள்ளதுடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இலங்கையின் ஆறுமாத கால நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
ஆனால் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் முதல் நாள் அமர்வின்போது உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்ளிட்டவர்கள் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றவுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணைக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. ஒரு நாடு நடுநிலை வகித்தது . ஆனால் இம்முறை இலங்கைக்கு ஆதரவாத பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.








