Breaking News

ஐ.நா விசாரணை அறிக்கை இலங்கையிடம் கையளிப்பு

இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனித மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தவார இறுதியில்இலங்கை அரசாங்கம் இந்த விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இந்த அறிக்கை பெரும்பாலும் நேற்று இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்த அறிக்கை கிடைத்த கையுடன், நேற்று சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீச ஜெனிவா புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நாளை மறுநாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முதல் நாள் அமர்வில் உரையாற்றுவதற்கு முன்னதாக, இந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது உரையில், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து பேரவையில் விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்த வார இறுதியில் ஐ.நா விசாரணை அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதா என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்துள்ளார்.

இதற்கிடையே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த அறிக்கையை அடுத்த வாரம் பகிரங்கமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை வரும் 30 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.