Breaking News

ஜெனிவாவில் என்ன நடக்கும் ?- செ.சிறிதரன்

இது இலங்கைக்கு ஜெனிவாவில் ஒரு சோதனையான நாள்.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. நடத்திய விசாரணை பற்றிய அறிக்கை அன்றைய தினம் வெளியிட இருப்பதே இதற்குக் காரணமாகும்.

இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு எதிரான பல கருத்துக்களைக் கொண்டதாகவும் கடும் சொற்பிரயோகங்களைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்று முன்னரே எதிர்பார்ப்புக்கள் வெளியாகியிருந்தன. இலங்கையை மோசமாகக் குற்றம் சுமத்தும் வகையில் அமைந்திருக்கும் என்ற கருத்தும் வெளியாகியிருந்தது. 

அத்துடன் இந்த அறிக்கையானது இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதாக இருக்கும் என்பதால், சர்வதேச அளவிலும் உள்ளூர் மட்டத்திலும் அரசு மோசமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு நிரலிடப்பட்டிருந்தது. 

ஆயினும் இலங்கையில் ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பொதுத்தேர்தல் என்பவற்றைக் காரணம் காட்டி, அரசு விடுத்த கோரிக்கையையடுத்து, செப்டெம்பர் மாதத்திற்குப் பின்போடப்பட்டிருந்த அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து, இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா அதற்கு சாதகமான நிலையாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. 

உள்ளக விசாரணையொன்றை விடாப்பிடியாக வலியுறுத்தி வந்த அமெரிக்கா இப்போது இலங்கையின் உள்ளக விசாரணை நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதுடன், அதற்கான பிரேரணையொன்றையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்; கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கின்றது. இது இலங்கை அரசாங்கத்திற்கு உற்சாகத்தை அளித்திருக்கின்றது. சர்வதேச விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தி வந்ததன் மூலம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கு நியாயமும் நீதியும் கிடைப்பதற்கு சர்வதேச ஆதரவு கிட்டியிருந்ததாகவே எண்ணியிருந்தனர். 

இதன் ஊடாகப் போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் வழி பிறக்கும் என்று நம்பியிருந்தார்கள். ஆனால், அமெரிக்கா இலங்கை அரசுக்கு சார்பாக எடுத்துள்ள திடீர் முடிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றார்கள். இந்த நிலைகுலைவு செப்டம்பர் 30 ஆம் திகதியை அவர்களுக்கு சோதனையான நாளாக மாற்றியிருக்கின்றது. 

அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டினால் உற்சாகத்தோடு செப்டம்பர் 30 ஆம் திகதியை எதிர்கொள்வதற்கு அரசு தயாராகி வருகின்றபோதிலும், சர்வதேச விசாரணையே வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர்; தரப்பில் உறுதியாகவும் பரவலாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது அரசுக்கும் 30 ஆம் திகதியை ஒரு சோதனையான நாளாகவே மாற்றியிருக்கின்றது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் போராட்ட நடவடிக்கைகள் முனைப்பு பெற்றிருக்கின்றன. 

அத்துடன் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருந்தன என்று ஒளிநாடா காட்சி ஆதாரங்களுடன் கூடிய விவரணப் படங்களை வெளியிட்டிருந்த சனல் 4 இப்போது மேலும் சில சாட்சியங்கள் அடங்கிய புதிய காணொளி ஒன்றையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வெளியிட்டிருக்கின்றது. இது சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

அத்துடன், இந்தக் காணொளியை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுப்பினர்கள் மத்தியிலும் போட்டுக்காட்டி, இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்துவதற்காக அதன் தயாரிப்பாளராகிய கெலும் மெக்ரே தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சனல் 4 வெளியிட்டுள்ள புதிய காணொளியானது, அமெரிக்காவின் ஆதரவான நிலைப்பாட்டில் உற்சாகமடைந்திருந்த அரசாங்கத்தை கலக்கமடையச் செய்திருப்பதாகவே தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஐ.நா. விசாரணை தொடர்பான அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் இலங்கையின் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற விவகாரத்தை தீவிரமான அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகும். இந்த நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்படும்போது, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதிலும், அது தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதிலும் முன் நின்று தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்ற வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான பொதுவான நிலைப்பாடு தொடர்பான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். 

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் இயக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன், பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு அமைப்பு என்ற அமைப்பினால் இந்தக் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மட்டுமல்லாமல் கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தக் கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் ஆதரவளித்திருக்கின்றனர். இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் சர்வதேச விசாரணை மிகவும் அவசியமானது என வலியுறுத்தி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய நடைபவனி ஒன்றையும் சிவாஜிலிங்கம் நடத்தியுள்ளார். இந்த நடைபவனிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். 

இந்தக் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையின் மூலம் என்ன விடயத்தை சாதிக்கப் போகின்றீர்கள்? இதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என்று எதிர்பார்க்கின்றீர்கள் என சிவாஜிலிங்கத்திடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், மனித உரிமை மீறல்கள் அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விசாரணையொன்றை நடத்தி அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடும்போது, அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன கருதுகின்றார்கள் என்ற அம்சத்தையும் உள்ளடக்க வேண்டும் என்ற நியதி இருக்கின்றது. 

இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களை மனித உரிமைப் பேரவை உள்வாங்கி, அந்தக் கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்குமானால், அவற்றையும் உள்ளடக்கி தனது பரிந்துரைகளைத் தயாரிக்கும். இந்த அடிப்படையிலேயே ஐ.நா. விசாரணை அறிக்கையில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டை உள்ளடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார். 

அது மட்டுமல்லாமல், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் ஜெனிவாவில் தங்கியிருந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அமர்வுகளில் பங்கு கொள்கின்ற பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவாஜிலிங்கம் பிரசாரங்களை முன்னெடுக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். இந்தச் செயற்பாடுகளுக்காக ரெலோ இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வேறு சிலரும் சிவாஜிலிங்கத்துடன் ஜெனிவா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அது மட்டுமல்லாமல் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு மேலும் வலுவூட்டுவதற்காக இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டும் வகையில் வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்றப் பிரேரணையின் பிரதியொன்றை முதலமைச்சரின் உறுதிப்படுத்தலோடு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு சிவாஜிலிங்கம் குழுவினர் கொண்டு செல்லவுள்ளனர். 

தமிழர் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய முயற்சிகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அறிக்கையின் பரிந்துரைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பான அம்சங்களை உள்ளடக்குவதற்கு வசதியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இருந்தபோதிலும், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பானதாக விசாரணை அறிக்கை எதிர்பார்க்கின்ற அளவுக்கு அமையாமல் போகலாம் என்ற அச்ச நிலைமையும் இல்லாமல் இல்லை. 

எது எப்படியானாலும், ஐ.நா.வின் விசாரணை அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்படும்போதே உண்மையான நிலைமை என்ன என்பது தெரியவரும். இது ஒரு புறமிருக்க, ஐ.நா.விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை வலுவானதாக்கும் முயற்சிகள் உள்நாட்டில், போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலான அரசியல் நிலைமைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தையும் சில தரப்பினர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

கடும்போக்கு அரசியல் முறைமையைக் கொண்டிருந்த முன்னைய ஆட்சியை இல்லாமற் செய்வதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மைத்திரி – ரணில் -– சந்திரிகா அணியினருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. இன்னும் வழங்கி வருகின்றது. மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் எதிர்ப்பரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போது மைத்திரியின் ஆட்சியில் மென்முறை அரசியல் அணுகுமுறையைப் புதிய அரசாங்கத்துடன் கொண்டிருக்கின்றது. 

பொறுப்பு கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தைப் போன்றே, சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என்று மைத்திரி தலைமையிலான அரசாங்கமும் திட்டவட்டமாக அறிவித்து செயற்பட்டு வருகின்றது. மென்முறை அரசியல் செயற்பாடு காரணமாக அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் விருப்பமாகவும் நோக்கமாகவும் தெரிகின்றது. 

இதன் காரணமாகவே சர்வதேச விசாரணையே தேவையென்று வடமாகாண சபையும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல தரப்பினரும் கோரி வருகின்ற நிலையில், தேர்தல் முடிந்ததன் பின்னர், ‘சர்வதேச விசாரணையொன்று நடந்து முடிந்துவிட்டது. மீண்டும் ஒரு சர்வதேச விசாரணையைக் கோருவதில் அர்த்தமில்லை’ என்று கூட்டமைப்பின் தலைமை கூறுகின்றது. ஆயினும் சர்வதேச விசாரணையே தேவை என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளதையடுத்து, கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் சர்வதேச விசாரணையொன்றைக் கோருகின்ற உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கின்றது என தெரிவித்திருக்கின்றார். 

சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா என்பதில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் பூடகமாக இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருப்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள். சர்வதேச விசாரணை தேவையில்லை என கருத்துரைத்திருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இப்போது கருத்துரைத்திருக்கின்றார்கள். 

ஐ.நா. மனித உரிமைப் பேரவை சர்வதேச விசாரணையொன்றை நடத்தியிருக்கின்ற போதிலும், அது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையே பெற்றிருக்கின்றது. பாதிப்பை ஏற்படுத்தியவர்களிடம் அவர்கள் செய்துள்ள குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டி விசாரணைகள் நடத்தப்படவில்லை. சில தரப்பினர் சுட்டிக்காட்டுவது போன்று ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதே இப்போது நடைபெற்றிருக்கின்றது. 

பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்களையும் - இரு தரப்பினரையும் நடுநிலையாளர்கள் எவரும் விசாரணை செய்யவில்லை. நீதிமன்ற விசாரணையைப் போன்று விசாரணைகளில் வெளிப்படுகின்ற தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத்தக்க வகையிலான விசாரணை செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பது சர்வதேச விசாரணையைக் கோருகின்ற தரப்பினருடைய வாதமாக உள்ளது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளையின் தலைமையில் நடைபெற்ற ஐ.நா. விசாரணையென்பது உள்ளக விசாரணையல்லவே. 

அது சர்வதேச விசாரணைதானே மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை அவசியமில்லையே. முதல் விசாரணையின் பெறுபேறுகளையடுத்து, அடுத்த கட்டமாக இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் சட்டரீதியாக இருக்க வேண்டுமானால், அது உள்ளக விசாரணையாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்த சர்வதேச விசாரணை அவசியமில்லை என்ற தரப்பினர், இப்போது சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என குறிப்பிட்டிருக்கின்றனர். 

புதிய அரசாங்கத்துடன் மென்முறை அரசியல் போக்கைக் கடைப்பிடித்து பிரச்சினைகளுக்குத் தீரவு காணலாம் என்ற நோக்கத்தில் செயற்படுகின்றபோது, சர்வதேச விசாரணையை முற்றாக மறுதலிக்கும் அரசாங்கத் தரப்பினருடன், உள்ளூர் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரடியாக முகத்தில் அடித்தாற்போன்ற நிலைப்பாட்டை எடுப்பது உள்ளூரில் - மென்முறை அரசியலில் மறுதலையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற அச்சமே இதற்கான காரணமாக இருக்கலாம். சர்வதேச விசாரணையா அல்லது உள்ளுர் விசாரணையா என்ற விடயம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில், விவகாரமாகி, கூட்டமைப்பு இரு கூராகியிருப்பதை இந்த நிலைமைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. 

இத்தகைய உள் முரண்பாடானது, செப்டெம்பர் 30 ஆம் திகதிய ஐ.நா. அறிக்கை வெளியீட்டை குழப்பகரமான ஒரு நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்கொள்ளப் போகின்றது.