Breaking News

கூட்டமைப்பை சிதைவடைய செய்ய பலர் முயற்சி - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் அதன் தலைமைத்துவத்திற்குள்ளும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது பலரின் தேவையாக தற்போது முன்னுரிமை பெற்றிருப்பதாகவும் அதனை நோக்காக கொண்டே தம்மீது பழி சுமத்தப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சூத்திரதாரிகளின் எதிர்பார்புக்களை நிறைவேற்றும் முகமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றமை வேதனை தரும் விடயமெனவும் நேற்றைய தினம் யாழ்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டங்களில் தான் இணையாமையே காரணமென தெரிவிக்கப்பட்டுவருகின்றபோதும் தமிழ் தேசியகூட்டமைப்பு பிரதிநிதிகளால் அவ்வாறான குற்றச்சாட்டு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாணசபை உறுப்பினர்களும் தன்னுடன் நெருக்கமான நட்புறவை பேணிவருவதாகவும் இவ்வாறான வதந்திகளை யார் பரப்புகிறார்கள் அவர்களின் நோக்கமும் தேவைப்பாடும் என்ன என்பதனை ஊகிக்க முடிவதாகவும் அவர சுட்டிக்காட்டியுள்ளார்.