Breaking News

இலங்கைக்கு வெளியிலேயே கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்! - சுரேஷ் கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்றுள்ள குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் நாட்டுக்கு வெளியிலேயே அமைய வேண்டுமென்றும், இதில் அனைத்துலக தரப்பினரே அதிகளவில் பங்கேற்கவேண்டுமென்றும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 28 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் வகையில் அமெரிக்கா தீர்மானத்தை கொண்டு வந்தததுடன், அதற்கு அனைத்துலக நாடுகளும் ஆதரவளித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மீறல்கள் தொடர்பாக சாட்சியங்கள் பெறப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து புதிய ஆட்சியாளர்களின் கோரிக்கைக்கமைய அவ்வறிக்கை வெளியிடுவது பிற்போடப்பட்ட நிலையில், தற்போது பொதுத் தேர்தலொன்று இடம்பெற்று கூட்டரசாங்கம் அமைந்துள்ள போதிலும், புதிய அரசாங்கமும் அனைத்துலக விசாரணையையோ அல்லது அனைத்துலக நியமங்களின் கீழான உள்ளக விசாரணையையோ ஏற்றுக் கொள்ள முடியாதென அழுத்தந் திருத்தமாக அறிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போத வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை, முழுமையான அனைத்துலக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமை, ஏமாற்றமளிப்பதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் அந்த அறிக்கையில் மிக முக்கியமாக இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கலப்பு சிறப்பு நீதி மன்றம் அமைக்கப்பட்டு சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்துலக, தேசிய நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளக விசாரணையூடாகவே தமிழர்களுக்கு நீதி வழங்குவோமென அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முறைமையூடாக எமக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் அவ்வாறான கலப்பு சிறப்பு நீதிமன்றமானது இலங்கைக்கு வெளியிலுள்ள நாடொன்றிலேயே அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், போரின்போது குற்றமிழைத்தவர்கள் கட்டளையிட்டவர்கள் தொடர்பாக குறித்த நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது அந்த நீதிமன்றம் உள் நாட்டில் அமைந்திருக்கும் பட்சத்தில் பல்வேறு அக புற அழுத்தங்களுக்கு உட்பட வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும் எனவும் விபரித்துள்ளார்.