இன்று புதுடெல்லியில் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் பிரதமர் ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன், அவரது மனைவி, இலங்கையின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழு புதுடெல்லி சென்றுள்ளது. அதேவேளை, இந்தக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக, ஜெனிவா சென்றிருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இன்று அதிகாலையில் புதுடெல்லியை வந்தடைந்தார்.
நேற்றிரவு புதுடெல்லியில் உள்ள தாஜ் பலஸ் விடுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருந்தார். இன்று காலையில், தாஜ் பலஸ் விடுதிக்குச் சென்று வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
அதன் பின்னர், இலங்கை பிரதமர் ஹைதராபாத் ஹவுசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடக அறிக்கையை வெளியிடவுள்ளதுடன், இலங்கை பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மதியபோசன விருந்து அளிக்கவுள்ளார். இன்று பிற்பகல், இந்திய மத்திய அமைச்சர்கள் பியுஸ் கோயல், நிதின் கட்கரி, சுரேஸ் பிரபு, தர்மேந்திர பிரதான் ஆகியோர் இலங்கை பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவர். நாளை காலையில், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இலங்கை பிரதமருடன் பேச்சுக்களை நடத்துவார்.
அதையடுத்து, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர், கொழும்பு திரும்பவுள்ளார்.








