Breaking News

இன்று வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை

இலங்கை போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக நிபுணர்களான மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் வழிகாட்டலில், சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை இலங்கை அரசாங்கத்திடம், இந்த அறிக்கையின் நீர்எழுத்து முத்திரையிடப்பட்ட இரண்டு பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் பதிலைப் பெறுவதற்காகவே இந்த முற்பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. ஐந்து நாட்களுக்குள் இந்த அறிக்கை தொடர்பான எழுத்து மூலமான பதிலை தருமாறு இலங்கை  அரசாங்கம் கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் அதிகாரபூர்வமாக அதன் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கருத்தையும் உள்ளடக்கிய இந்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 30ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.