அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா அதிரடி நீக்கம்..!
ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமாலுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள இஷாந்த் ஷர்மா, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இதனால் அவர் நவம்பர் மாதம் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழற்றி விடப்பட்டிருக்கிறார்.
இது குறித்து டெல்லி அணியின் தேர்வு குழு தலைவர் வினய் லம்பா கூறுகையில் ‘பலமுறை தொலைபேசி மூலம் இஷாந்த் ஷர்மாவை தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பு எதனையும் ஏற்கவில்லை. மேலும் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியும் பதில் எதுவும் அளிக்கவில்லை.
இதனால் கௌதம் கம்பீர் தலைமையிலான டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா இடம்பெறவில்லை’ என்று தெரிவித்தார்.
ஏற்கனவே சகலதுறை ஆட்டக்காரர் ரஜத் பாட்டியாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படாததால் சர்ச்சை கிளம்பிய நிலையில் இஷாந்த் ஷர்மா நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அணியில் புதிய நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.