இந்தியா செல்கிறார் பிரதமர் ரணில்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை இந்தியாவுக்கு, தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் பயணமாக புதுடெல்லி செல்லும் ரணில் விக்கிரமசிங்க, வரும் 15ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேசவுள்ள பிரதமர் ரணில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்பதற்காக வரும் 12ஆம் நாள் ஜெனிவா செல்லவுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புதுடெல்லியில் இந்தியத் தரப்புடனான இருதரப்பு பேச்சுக்களில் சிறிலங்கா பிரதமருடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணத்தின் போது, சீபா எனப்படும் விரிவான பொருளாதாரப் பங்குடமை உடன்பாட்டில் கைழுத்திடுவது, குறித்து முக்கியமாக இந்தியா கலந்துரையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப்பாதையை அமைப்பது தொடர்பாகவும் இந்தியத் தரப்பில் முக்கியமானக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்தும் இந்தச் சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பான பிந்திய முன்னேற்றங்கள் தொடர்பாகவும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில்- மோடி சந்திப்பின் போது. மீனவர்களின் விவகாரம் தொடர்பாகவும் முக்கியமாக ஆராயப்படும் என்று இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலர் என்.டி.ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இலங்கை பிரதமர் நடத்தவுள்ள பேச்சுக்களில், மீனவர் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக, பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலால், உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.