Breaking News

சர்வதேச நீதி விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று, பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது. 

எனவே, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையக விசாரணையில் தெரியவரும் உண்மைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புக் கொள்ளும்படி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும். 

மேலும், இதற்கானத் தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியா-இலங்கை இடையிலான வங்கக்கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் எந்த பிரச்சினையும் இன்றி மீன்பிடிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமரிடம் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.