சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் இல்லை இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த அமர்வில் இலங்கை விவகாரம் பிரதான இடம் வகிக்கவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுஸைன் சமர்ப்பிக்கவுள்ளார். எனி னும் இந்த அறிக்கை 30 ஆம் திகதிக்கு முன்னரே சமர்ப்பிக்கப்படலாமெனவும் தெரிய வருகிறது. குறித்த அறிக்கையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தாது உள்ளக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
நீதி மற்றும் பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் ஜெனீவாவை சென்றடைந்துள்ளனர். இதேவேளை, வன்னி மாவட்ட எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இம்மாதம் 25 ஆம் திகதி பார்வையாளராக இம்மாநாட்டுக்கு செல்லவுள்ளார். மேலும் வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் (ரெலோ) அனந்தி சசிதரன் (தமிழரசுக்கட்சி) ஆகியோரும் ஜெனீவா செல்லவுள்ளனர். இதேவேளை தமிழரசுக்கட்சி சார்பில் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் ஜெனிவா சென்றுள்ளனர்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டு, அமெரிக்கா , மனித உரிமைப் பேரவையில் 2012 , 2013, 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கெதிராக பிரேரணை கொண்டுவந்தது. எனினும் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2014 ஆம் ஆண்டு அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்தன.
எனவே குறித்த பிரேரணைக்கு இணங்க மனித உரிமை அலுவலகம் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து கண்டறியும் நடவடிக்கையினை ஏற்கனவே நிறைவுசெய்திருந்தது. அந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியிடப்படவிருந்தது.
ஆயினும் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசாங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க அவ்வறிக்கை செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடபட்டது.
தமிழ் மக்கள் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என போருகின்ற வேளையில் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் உள்ளக விசாரணைப் பொறிமுறையை முன்வைப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் நிலவுவதாகத் தெரிய வருகிறது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா தற்போது இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் இங்குள்ள பல தரப்பினருடனும் பேச்சுவார்ததைகளை நடத்தியிருந்தார்.
இதேவேளை நாளை ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான பிரேரனை ஒன்றை முன்வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








