அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு- ரணிலிடம் மோடி உறுதி (காணொளி)
ஜெனீவா மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்குஇந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
புதுடில்லியில் இன்று செய்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற சந்திப்பின்போது நரேந்திரமோடி இவ்வாறு உறுதியளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலை புதுடில்லி சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
போரின் பின்னரான காலகட்டத்தில் ஸ்ரீலங்காவில் அமைதியை ஏற்படுத்த புதிய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் முன்னைய ஆட்சியை விட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அமைதியை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளதாகவும் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அதேவேளை பிராந்திய நலன்களுக்கு ஏற்றமுறையிலான இந்தியாவின் அரசியல் நகர்வுகளுக்கு ஸ்ரீலங்கா ஒருபோதும் இடையூறாக இருக்காது என்றும் இந்திய மத்திய அரசுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்து செயற்பட ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நரேந்திரமோடியிடம் உறுதியளித்தார் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இருநாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.
ஸ்ரீலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துக்களை கூறியதாகவும் தொிவித்த எமது செய்தியாளா் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அதிகாரபூர்வமாக இரண்டு நாடுகளும் இதுவரை அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த சந்திப்பின்போது வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பேணும் வகையிலான நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் 200 படுக்கை வசதிகளை கொண்ட நவீன வசதிகளுடன் கூடி வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கு நிதியுதவி வழங்குவது குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச வா்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி-
தொடர்புடைய செய்தி-







