இசாந்த் சர்மாவுக்கு வீராட் கோலி ஆதரவு
கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. கடைசியாக இலங்கை மண்ணில் கடந்த 1993-ம் ஆண்டு இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.
மேலும் இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டமான நேற்று 2-வது இன்னிங்சில் இந்தியா துடுப்பெடுத்தாடிய போது, 10-வது விக்கெட்டாக இசாந்த் சர்மா களம் இறங்கினார். இதன்போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் இசாந்த் சர்மாவிற்கு தொடர்ந்து பவுன்சராக வீசினார்.
இதனால் கோபம் அடைந்த இசாந்த் சர்மா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு பிராசத்துடன் இணைந்து தினேஷ் சந்திமால், லகிரு திரிமானே ஆகியோரும் இசாந்த் சர்மாவுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தம்மிக பிரசாத் துடுப்பெடுத்தாடிய வேளை, இசாந்த் சர்மா பந்தில் அடிபட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துவிட்டதாக தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி கோலி கூறும் போது “ கோபகார வேக பந்து வீச்சாளர் என்றால் தலைவர்களுக்கு எப்போதுமே இஷ்டம் தான். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும், இசாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச அந்த சம்பவமும் ஒரு காரணம். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்” என அவர் தெரிவித்துள்ளார்