முத்தரப்பு அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள அமெரிக்கப் பிரேரணை
இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் இறுதிவடிவமானது முத்தரப்பு அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் பிரேரணையானது போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக விசாரணையையே வலியுறுத்தவேண்டுமென இலங்கை தரப்பில் அழுத்தம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கரம்நீட்டியுள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் அமெரிக்கப்பிரேரணையானது சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணையை நடத்தவேண்டும் என அழுத்தம் பிரயோகித்துவருகின்றன.
இந்த வகையில் அமெரிக்கப் பிரேரணை எவ்வாறு அமையுமென்பது தொடர்பில் பலரும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.பெரும்பாலும் இலங்கையின் வலியுறுத்தல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டே அமெரிக்கப் பிரேரணை மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கப் பிரேரணையின் நகல்திட்ட வரைபானது உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 26 பந்திகளைக் கொண்டுள்ள இந்த திட்டவரைபானது இலங்கை அரசாங்கத்திற்கும் இரகசியமான முறையில் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்க பிரேரணையானது வலுவிழக்கப்படும் சாத்தியமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் முதலாம் திகதி அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நகல் பிரேரணையை இலங்கை அரசாங்கம் கடந்த திங்கட் கிழமை முழுமையாக நிராகரித்திருந்தது.குறித்த பிரேரணை வரைபானது இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையில் பாரிய எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுமென ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மான வரைவு அடுத்த வாரமே சமர்ப்பிக்கப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.
இந்த தீர்மான வரைவு குறித்து, கடந்த இரண்டு தினங்களாக ஜெனிவாவில் இரண்டு முறைசாரா கூட்டங்களை நடத்திய அமெரிக்கா, உறுப்பு நாடுகள், மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.
இந்தக் கூட்டங்களின் போது, இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள், தீர்மான வரைவு பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச தலையீட்டுக்கு வழிவகுக்கும் பந்திகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.
அதேவேளை, ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் தீர்மான வரைவுக்கு பலமான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அதனை மேலும் வலுப்படுத்தவும் கோரின.இந்தநிலையில், அமெரிக்கா நடத்திய இரண்டாவது உபகுழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அமெரிக்கா திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவை இன்று உறுப்புநாடுகள் மத்தியில் விநியோகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பும் அமெரிக்கா, மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை மற்றொரு முறைசாராக் கூட்டத்துக்கு ஒழுங்குசெய்துள்ளது.ஜெனிவாவில் உள்ள ஐ.நா.தலைமையகத்தின் 22ஆவது அறையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை இந்த முறைசாரா கலந்துரையாடலை நடத்த அமெரிக்கா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னரே, அமெரிக்கா இறுதித் தீர்மான வரைவை தயாரித்து, அடுத்த வாரமே அதனைப் பேரவையில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, இன்று அல்லது நாளை அமெரிக்க தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.
கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலு வலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் இலங்கையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக் கிய
கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டு மென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை இலங் கையில் ஏற்படுத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவரி மாத இறுதியில் தீர்மானம் எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.