Breaking News

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நாசர் தேர்வு

இந்தியாவில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் நாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் நாசர் தெரிவு செய்யப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் வெளியிட்டார்.

அதற்கமைய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1344 வாக்குகளையும், சரத்குமார் 1231 வாக்குகளையும் பெற்றுகொண்டனர். நடிகர் நாசரின் வெற்றிக்கு சரத்குமார் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் 1445 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதுடன், அவருக்கு போட்டியாக களமிறங்கிய ராதாரவிக்கு 1138 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றது.

இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கியப் பதவிகள் அனைத்தையும் ‘பாண்டவர் அணி’ என்று அழைக்கப்பட்ட நடிகர் விஷாலின் அணி கைப்பற்றியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பாடசாலையில் நடைபெற்ற இத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 29 பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற தேர்தலில், திரைப்பட நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட ஏராளமானோர் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகின.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தல் இறுதியாக 2012 இல் நடைபெற்றதோடு, அதில் தொடர்ச்சியாக மூன்று முறையாகவும் சரத்குமார் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)