Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலையை இனியும் தாமதிக்க கூடாது: செல்வம் எம்.பி

சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை இனியும் தாமதிக்காது, அவர்களை விடுவிக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 250 இற்கு அதிகமான அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் குறித்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இந்த அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்த நிலையில் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் சமூக அமைப்புக்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொண்ட சகல போராட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியதோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர்களும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம். ஆனால் மஹிந்த அரசாங்கம் மௌனம் காத்தது. இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலை குறித்து மக்கள் தொடர்ச்சியாக தற்போதைய ஜனாதிபதியிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் எவ்வித பலனும் இல்லை.

அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பாரிய மன அழுத்தத்தில் உள்ளதோடு அவர்களின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவர்களின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இதனால் பொறுமை இழந்த அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று குதித்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குவதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.