Breaking News

எல்லை நிர்ணயம் குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம், பெயர் மற்றும் இலக்கங்களின் திருத்தம் தொடர்பில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றபோது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊழல்மிக்க விருப்பு வாக்கு முறையை அகற்றுவதற்கு முடியாது போனதாக தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, விரைவில் இந்த முறைமை மாற்றப்படுமென தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எம்.மிஸ்வார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் சட்டத்தரணி சாலிய மெத்திவ், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.