Breaking News

மகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் மங்கள

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இலங்கை முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை ஒப்புக்கொண்டார்.

“இலங்கையின் கடந்த ஆட்சியில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்பட்டனர்.பௌத்த நாடு என்ற பெயரில் மிகவும் மோசமான வகையில் சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டு வந்தனர்.அதேபோல் திட்டமிட ஒரு இன அழிப்பும், அடக்குமுறையும் கடந்த காலங்களில் நடைபெற்றன.

பெரும்பான்மை ஆதிக்கத்தை தூண்டிவிடும் வகையிலும், அவர்களது கரங்களை உயர்த்தும் வகையிலும் இவர்களது செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன.அதேபோல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த காலங்களில் ஆட்சி செய்த தலைமைகள் மறந்துவிட்டன.

ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்ப நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் மூவின மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையுடன் கூடிய பயணத்தை முன்னெடுக்க முன்னைய அரசாங்கம் விரும்பவில்லை.

ஜனநாயகம், நல்லிணக்கம் எவையும் சரியான முறையில் பாதுகாக்கப்படவில்லை. அதன் தாக்கம் மிகவும் மோசமானதாக அமைந்தது.ஆனால் இப்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.