Breaking News

மீனவர் பிரச்சினையை தீர்க்க கடலில் கூட்டு ரோந்து – சம்பந்தன் வலியுறுத்தல்

மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, புதுடெல்லியுடன் மட்டுமன்றி, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடனும் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான, இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடிப்பது தொடர்பாக நேற்று  நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர்,விஜித ஹேரத் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையில், குறிப்பாக வடபகுதி கடல் எல்லையில் அத்துமீறி அடிமடி இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர்.  இதனால் எமது மீன் வளங்கள் அனைத்தையும் இந்திய மீனவர்கள் அள்ளிக் கொண்டு செல்வதுடன், எமது கடல் வளமும் முழுமையாக சுரண்டப்படுகிறது. எமது மீனவர்கள் இதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.

வடக்கு, கிழக்கு மீனவர்கள் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதோடு இப் பிரச்சினை காரணமாக இரு நாட்டு மக்களிடையேயும் பகையுணர்வு ஏற்படுகிறது.எனவே இதனை தடுக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்சினை தொடர்பாக புதுடெல்லி மத்திய அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுகளை நடத்தாது தமிழ்நாட்டுடனும் அதன் முதலமைச்சருடனும் பேச்சு நடத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.இலங்கை, இந்தியா, தமிழ்நாடு என முத்தரப்பு பேச்சுகள் நடத்த வேண்டியது கட்டாயமானதாகும்.

அத்துடன் இலங்கை கடற்படையினரும், இந்திய கடலோர காவல் படையும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறான நடவடிக்கைகளினால் இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் வருவதை தடுக்க முடிவதோடு பிரச்சினைகளையும் குறைத்துக் கொள்ள முடியும்.புதுடெல்லியில் நான் இருந்த சந்தர்ப்பத்தில் அந்நாட்டின் உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடினேன்.

இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்தானது இந்திய, இலங்கை மீனவர்கள் அனைவரையும் ஆழ்கடலில் மீன்படிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பதாகும்.அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.இப் பிரச்சினையை தொடரவிடக் கூடாது, இது எமது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே விரைவாக தீர்க்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அது நிறைவேற்றப்பட வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.