Breaking News

உதலாகம, பரணகம அறிக்கைகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம்!



உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஆணைக்குழுக்களின் அறிக்கையை கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். பரணகம மற்றும் உதலாகம ஆணைக்குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டவை.

ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தலைமையில் காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், ஓய்வுபெற்ற நீதிபதி நிஷங்க உதலாகம தலைமையில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு உதலாகம ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது.

15 சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்த அந்த ஆணைக்குழு அவற்றில் 7 சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

01. 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்ஷன் எகய்ன்ஸ்ட் ஹங்கர் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்.

02. 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் முஸ்லிம்கள் சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் மூதூரில் இருந்து வெலிகந்த வரையில் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டிக்குள் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்.

03. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் 05 மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை.

04. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலையில் 51 பேர் கொலை செய்யப்பட்டமை.

05. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொத்துவில் பிரதேசத்தில் 10 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டமை.

06. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் 68 பேர் கொலை செய்யப்பட்டமை.

07. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிகீரியா திகம்பதண பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பின் 98 பேர் கொலை செய்யப்பட்டமை.

மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

யுத்த காலத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை, பொறுப்புக்கூறல் விடயங்கள், பொதுமக்களின் உயிருக்கு அனர்த்தம் விளைவித்தமை மற்றும் அது சார்ந்த விடயங்களை ஆராயும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆணைக்குழுவின் விசாரணைக்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டது.

பரணகம ஆணைக்குழுவிற்கு சர்வதேச சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அத்துடன், இராணுவ அறிக்கையிடல் நிபுணரான மேஜர் ஜெனரல் ஜோன் ஹோம்ஸின் அறிக்கையும் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டது.

அந்த இரண்டு அறிக்கையிலும் குறித்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், உதலாகம அறிக்கையிலும் சில சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி,

01. சில சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள்.

02. தமது ஆணைக்குழுவினால் விசாரணைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமற்போன சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக மற்றுமொரு ஆணைக்குழுவை நியமித்தல்.

03. ஆணைக்குழு அடையாளங்கண்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கு இயலுமான அளவு இழப்பீடு வழங்குதல்.

மேலும், இதன்போது சமர்பிக்கப்பட்டுள்ள பரணகம அறிக்கையின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவை,

01. உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நியமித்தல் மற்றும் மேல் நீதிமன்றத்தில் யுத்தக்குற்றம் தொடர்பிலான ஒரு பிரிவை ஸ்தாபித்தல்.

02. யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளங்காணப்பட்ட நபர்களை விசாரணைகளுக்காக நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்வதற்கான அதிகாரத்தை சட்ட மாஅதிபருக்கு வழங்குதல். போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகளில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் அதிகளவில் மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.