Breaking News

அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு போரையும் எதிர்கொள்ளத் தயார் - வட கொரியா

அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு போரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது. 

அத்துடன் அவ்வாறு அமெரிக்கா அரம்பிக்கும் எந்தவொரு போருக்கு எதிராகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை வட-கொரியாவுக்கு இருப்பதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். ஆளும் பாட்டாளிகள் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் பியோங்யாங்-இல் பெரும் கொண்டாட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தன. இதன் போது அவர் ஆற்றிய அரிதான உரையொன்றிலேயே கிம் ஜோங்- உன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆயிரக்கணக்கான படைவீரர்கள் அவருக்கு முன்னால் அணிவகுத்து சென்றதுடன், போர்த் தாங்கிகளும், ஏவுகணைகளும் பொதுமக்களின் பார்வைக்காக அணிவகுத்து சென்றன. பின்னர் பள்ளிச்சிறார்கள் அடங்கலாக ஆயிரக் கணக்கான பொதுமக்களும் பல்வர்ண கொடிகளை அசைத்தவாறும் நடனமாடியவாறும் ஊர்வலமாக சென்றனர். வடகொரியாவின் அரச தொலைக்காட்சியும் உணர்வுபூர்வமான வர்ணனைகளுடன் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.