Breaking News

இன்று காலை விழுகிறது மர்மப்பொருள் – தெற்கு கரையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் காத்திருப்பு

இன்று காலை இலங்கையின் தென்பகுதிக் கடலில் விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர்.

WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மர்மப் பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய அப்பலோ 10 விண்கலத்தின் பூஸ்டரான, ஸ்நூப்பி என அழைக்கப்படும், பாகமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது, செக்கனுக்கு 11 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கியதாக விழும் இந்த மர்மப் பொருள், பூமியின் கடல் மட்டத்துக்கு மேல் 80 கி.மீ தொலைவில் வெடித்துச் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது நிலத்தை வந்தடையும் வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும், நிலமட்டத்துக்கு நெருக்கமாக நெருப்புக்கோளம் தென்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த மர்மப் பொருள் விழுவதை அவதானிக்க, ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகள் குழுவொன்று மாத்தறை பகுதியில் முகாமிட்டுள்ளது.ருகுணு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவொன்றும் இந்தக் குழுவினருடன் இணைந்துள்ளது.

இதற்கிடையே இந்த மர்மப் பொருள் விழும் என்று எதிர்பார்க்கப்படும், இலங்கைக்குத் தெற்கிலுள்ள கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அவசர நிலையை எதிர்கொள்வதற்குத் தயாராக இலங்கை கடற்படைப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை, இந்த மர்மப்பொருள் விழும் நேரத்தில், தென்பகுதி கடற்பிரதேசம் வழியான விமானப் போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல விமான சேவைகள் தமது பயணப் பாதையை மாற்றியமைத்துள்ளன.