Breaking News

எங்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள் - சீ.வி.யிடம் வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

உங்களுடைய காலத்தில் நாங்கள் எங்கள் சொந்த நிலங்களுக்கு சென்றாகவேண்டும். இல்லையேல் நாங்கள் 25 வருடங்கள் சந்தித்த அவல வாழ்க்கை எங்கள் வாழ்கை முழுவதும் சந்திக்கவேண்டியிருக்கும். எங்களை எங்கள் சொந்த மண்ணில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்.

மழை பெய்து, வெள்ளம் வீடுகளுக்குள் வந்ததால் நாங்கள் 3 நாட்களாக 3 வேளை உணவு சாப்பிடுகிறோம். இல்லையென்றால் மாலை 4 மணிக்கு பின்னர் ஒருவேளை உணவோடுதான் எங்கள் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கின்றது. சுய மரியாதை இழந்து வாழ்ந்து கொண்டிருகிறோம்.

மேற்கண்டவாறு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர். 

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள கோணப்புலம் முகாம் மக்களை நேற்றய தினம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் வழங்கியிருந்தார்.

இதன்போதே மக்கள் மேற்படி உருக்கமான கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர். விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் மக்கள் மேலும் கூறுகையில், எங்களுடைய சொந்த மண்ணில் சுயமரியாதையுடன் நின்மதியாக வாழ்ந்த மக்கள் நாங்கள். ஆனால் சொந்த மண்ணை விட்டு வெளியேறிய நாள் தொடக்கம் சுயமரியாதை இழந்து ஒவ்வொரு நாளும் அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உழைப்பு இல்லை. இதனால் ஒரு நாளைக்கு ஒவ்வொரு குடும்பமும் மாலை 4 மணிக்கு பின்னர் ஒருவேளை உணவை மட்டுமே உட் கொள்கிறோம். எங்களுடைய பிள்ளைகள் நன்றாக படிக்கும் நிலையில் உள்ளபோதும், வறுமை மற்றும் நாங்கள் முகாம்களில் உள்ளமையினால் எங்கள் பிள்ளைகளால் முறையாக படிக்க முடியவில்லை. இதை விட மோசம் 25 வருடங்களாக தற்காலிக முகாம் என்ற பெயரில் ஒழுங்கான வீ டுகள் இல்லை. 230 குடும்பங்களுக்கு 22 மலசலகூடம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் எங்கள் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. 16. 17 வயதிலேயே திருமணம் முடித்துக் கொண்டு மற்றவர்களால் இழிவாக பார்க்கப்படும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஒரு காலத்தில் நின்மதியாக சொந்த மண்ணில் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இன்றைக்கு இப்படி இருக்கிறோம்.

எங்களை உங்கள் காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் எங்களுடைய அவலம் நிறைந்த வாழ்க்கை வாழ்க்கை முழுவதும் தொடரும். எங்களை எங்கள் சொந்த மண்ணில் மீள்குடியேற்றுங்கள் என மக்கள் உருக்கமான கோரிக்கையினை முதலமைச்சரிடம் விடுத்துள்ளனர். 

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் நான் தினசரி பார்த்துக் கொண்டும். கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். அந்தவகையில் உங்களை உங்கள் சொந்தமண்ணில் மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அது காலதாமதமாகிக் கொண்டேயிருக்கின்றது. ஆனாலும் தொடர்ந்து முயற்சிப்பேன் நம்பிக்கையுடன் இருங்கள் என கூறினார்.