Breaking News

கே.பி க்கு எதிராக 192 குற்றச்சாட்டுக்கள்; அதில் 46க்கு சாட்சிகள் இல்லை


முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு தலைவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி சம்பந்தமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். 

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடக் கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இதனை நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஜேவிபி தாக்கல் செய்துள்ள 192 குற்றச்சாட்டுக்களில் 46 குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக, நாட்டின் அனைத்து பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் வாயிலாகவும் அறிக்கை பெறப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார். 

பெறப்பட்ட அறிக்கைகளின் படி, குமரன் பத்மநாதனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித சாட்சிகளும் காணப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

அத்துடன் குமரன் பத்மநாதனுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் புதிதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

அதன்படி குறித்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 3ம் திகதிக்கு ஒத்தி வைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அறிக்கையை அதற்கு ஒருவாரம் முன்னதாக நீதிமன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டார்.