எமது விடுதலை தொடர்பாக வடக்கு முதல்வர் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுங்கள் - கைதிகள் கோரிக்கை
எமது விடுதலை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய தரப்புக்கள், சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உடனடியாக ஒன்றுகூடி முடிவெடுங்கள் என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா, நடராஜா ஆகியோர் நேற்று முற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்தபோதே கைதிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதன்போது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் உடல்நிலை மற்றும் அவர்களது கருத்துக்கள் தொடர்பாக எம்.பி.க்கள் கேட்டறிந்து கொண்டனர். இவ்விஜயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து வெளியிடுகையில்,
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலை சோர்வடைந்துள்ளது. அவர்களின் விடுதலை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதி வழங்குகின்றபோதும் தற்போது வரையில் அவற்றை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதிருக்கின்றமை கவலை அளிக்கின்றது.
அவ்வாறான நிலையில் எமது விடுதலை தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத் தரப்புக்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் உடனடியாக கூடி ஆராய வேண்டும். அக் கூட்டத்தில் எமது கோரிக்கைகளை உள்வாங்கும் வகையிலான உறுதியான நிலைப்பாடொன்று அறிவிக்கப்படவேண்டும். அந்நிலைப்பாட்டை அடைவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டுமென அவர்கள் என்னிடத்தில் கோரியுள்ளனர்.
அதேநேரம் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் நாம் வவுனியா மாவட்டத்தில் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளோம். அதுமட்டுமன்றி எமது தலைமை ஊடாக அவர்களின் விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்கவுள்ளோம்.
இவர்களின் விடுதலை தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கவுள்ளோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடத் தில் உள்ள நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தவேண்டும். அதனை செய் யத்தவறுமாயின் எதிர்காலத்தில் எமது மக் களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட் டோம் என்றார்.