Breaking News

இலங்கைக்கு எவ்வித இராணுவ, ஆயுத உதவியும் வழங்கக் கூடாது!

இலங்கைக்கு எந்த விதமான இராணுவ, ஆயுத உதவியும் வழங்கக் கூடாது என பா.ம.க நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுகாக் 5 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் அந்நாட்டு போர்ப்படை அதிகாரிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்திய போர்ப்படைத் தளபதி பேச்சு நடத்தவிருக்கிறார். 

ஒரு நாட்டின் போர்ப்படை தளபதி இராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த மற்றொரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதில் தவறு இருக்க முடியாது. ஆனால், இந்திய போர்ப்படைத் தளபதி தல்பீர் சிங் பயணம் மேற்கொள்ளும் நாடும், அவரது பயணத்திற்கான நோக்கமும் தான் கவலை அளிக்கிறது. 

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்கள் பழையதாகிவிட்ட நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிய போர் விமானங்களை வழங்குவது, டாங்கிகள், விமானங்களை சுட்டு வீழ்த்தும் டாங்கிகள் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்குவது ஆகியவை தான் இந்திய இராணுவத் தளபதி தல்பீர் சிங் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் ஆகும். 

உலகின் மிகக் கொடிய போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்த இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 2009ஆம் ஆண்டின் நடைபெற்ற ஈழப்போரின் கடைசி சில நாட்களில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 

விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசியும், டாங்கிகள் மூலம் இரசாயன குண்டுகள் வீசியும் தான் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மீதான இக்குற்றச்சாற்றுகள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மார்சுகி தருஸ்மேன் தலைமையிலான விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு, டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், ஜெர்மனியின் ப்ரெமென் மக்கள் தீர்ப்பாயம் ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 

இக்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கான தாக்குதலில் இந்தியாவால் வழங்கப்பட்ட எம்.ஐ.17 வகை ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. 

இத்தகைய சூழலில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது கொலைகாரனின் கைகளில் கத்தியைக் கொடுப்பதற்கு சமமான செயலாகவே அமையும். 

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவான இலங்கைக்கு அண்டை நாடுகளிடம் இருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை. அத்தகைய நாட்டுக்கு ஆயுதங்களை இந்திய அரசு வழங்குவது எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். 

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவை இந்தியா எடுத்திருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் இதை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். இந்த நிலைப்பட்டை மாற்றிக் கொள்வதற்கான எந்த அவசியமும் ஏற்படவில்லை. 

இத்தகைய சூழலில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை ஆயுதங்களை வாங்குவதை தடுக்கும் நோக்குடன் ஆயுத உதவி செய்வதாக இந்தியா தரப்பில் வைக்கப்படும் வாதங்கள் சரியானவை அல்ல, அவற்றை ஏற்கவும் முடியாது. 

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஆதரவாக இந்த ஒரு காரணம் இருந்தால், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்பதற்கு ஆயிரக்கணக்கான காரணங்களை பட்டியலிட முடியும். 

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் வழி தவறி சென்றால் கூட அவர்களை மன்னிக்க முடியாமல் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தும் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவது தமிழக மக்களை சிறுமைப்படுத்தும் செயலாகும். 

எனவே, இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிடுவதுடன், இலங்கைக்கு இனி எந்த காலத்திலும் ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா வழங்காது என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.